• July 24, 2025
  • NewsEditor
  • 0

“எடப்பாடி பழனிசாமி வைத்த குறி தப்பாது, வேட்டையன் குறி வைத்தால் வெல்வார் என்பதைப்போல எடப்பாடி பழனிசாமி குறி வைத்தால் வெல்வார்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மதுரை தெப்பகுளம் முக்தீஸ்வரர் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அதிமுக பிரதான கட்சியான திமுக-வை எதிர்க்கிறது. தவெக, நாதக, அன்புமணி ராமதாஸ் பாமக திமுக-வை எதிர்க்கிறது. எதிர்க்கும் எல்லோரும் ஒன்று சேர்ந்தால்தான் நோக்கம் நிறைவேறும். திமுக-வில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர், திருமாவளவன் ஆகியோரும் ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை சொல்கின்றனர். 20 சதவிகிதம் ஆதரவு, 80 சதவிகிதம் எதிர்ப்பு என்ற நிலையில் உள்ளனர்.

திமுக-வை எதிர்க்கும் கட்சிகளில், 50 ஆண்டுக்கால வரலாற்றுடன் மக்கள் நம்பிக்கை கொண்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். 80 சதவிகித திமுக எதிர்ப்பு பிரிந்து நிற்பதால், சிதைந்து விடக்கூடாது மக்களுக்கு விடியல் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் எடப்பாடி பழனிசாமி பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறார். எதிர்ப்பவர்கள் ஒன்று சேர்ந்தால்தான் நோக்கம் நிறைவேறும்” என்றவரிடம்,

அன்வர்ராஜா விலகல் குறித்து கேட்டதற்கு, “தனிப்பட்ட ஒருவர் எடுக்கும் முடிவு கட்சியை பாதிக்காது. அதை பொது விவாதத்திற்கு கொண்டு வர வேண்டிய தேவை இல்லை. நாங்கள் புலி வேட்டைக்கு செல்கிறோம், இடையில் எலி, அணில் ஓடும், அதையெல்லாம் பார்க்க முடியாது, ஓ.பி.எஸ் இணைப்புக்கு காலம் கடந்துவிட்டது” என்றவரிடம்

ஆர்.பி.உதயகுமார்

‘மற்ற கட்சிகள் அதிமுக-வுடன் இணைய பாஜக-வுடனான கூட்டணி தடையாக உள்ளதா?’ என்ற கேள்விக்கு, “நல்ல நோக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்யலாம்” என்றவர்,

“மதுரை மாநகராட்சி ஊழல் குறித்து விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருப்பதால் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக ஆட்சியில் அரசு கஜானாவில் மக்களுடைய பணம் பாதுகாப்பாக இருந்தது. ஆனால் திமுக-வின் ஆட்சியில் அரசு கஜானாவில் உள்ள பணம் தங்களின் பணம் என நினைக்கிறார்கள்” என்றார்.

“எடப்பாடி பழனிசாமி வைத்த குறி தப்பாது, வேட்டையன் குறி வைத்தால் வெல்வார் என்பதைப்போல எடப்பாடி பழனிசாமி குறி வைத்தால் வெல்வார்” என்றவரிடம்,

‘நீதிமன்ற வழக்குகள், தேர்தல் ஆணைய விசாரணை அதிமுகவுக்கு தடையாக இருக்குமா? என்ற கேள்விக்கு,

“ஆடி முடிந்து ஆவணி பிறந்தால் எல்லாம் சரியாகும், அதிமுகவிற்கு நல்லதே நடக்கும்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *