
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் அதிக அளவிலான விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதை நெல்களை விதைத்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் தற்போது அறிமுகமே இல்லாத புது விதமான களைகள் வளருகிறது.
எவ்வளவு களைக்கொல்லிகள் அடித்தாலும் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்துப் பேசிய நிலக்கோட்டை விளாம்பட்டி விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன், “முன்னாடி எல்லாம் விவசாயத்திற்கு ஆட்கள் கிடைத்தார்கள் ஆனால் இப்போது, வேலைக்கு ஆட்கள் கிடைக்காத காரணத்தினால், நாங்களே நேரடியாக விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம்.
இப்போது விவசாயிகள் டிரம் சீடர் (Drum Seeder) மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி விதை நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாற்றத்தால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்தாலும் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறோம்.
விதைகள் முழுவதுமே கடைகளில் வாங்கி விதை நடவு பணிகளைச் செய்து வருகின்றோம். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு விதை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும், உரக்கடைகாரர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் விதைகள் மற்றும் களைக்கொல்லிகளில் புது விதமான மோசடியைச் செய்து வருகின்றனர்.
கடைகளில் வாங்கும் விதைகளை நடவு பணி செய்து களைக்கொல்லி அடித்த பின்னர், இந்தப் பகுதிக்கே அறிமுகமில்லாத சில களைகள் வளருகின்றன. ‘நரிவால் புல்’ என்று ஒன்று திட்டு திட்டாக வளருகிறது, இதனுடைய விதை எல்லா இடங்களிலும் வேகமாகப் பரவி விடுகிறது.
இதோடு இன்னமும் பெயர் தெரியாத சில களைகளும் வளர்ந்து, வேகமாக மற்ற இடங்களுக்கும் பரவி விடுகிறது. இந்தப் பகுதியிலேயே அறிமுகம் இல்லாத களைகள் முளைக்கும் போது அதைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது. இதற்குத் தனியாக மருந்து அடிக்கச் செலவு செய்ய வேண்டியுள்ளது.

இதனால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். ஆட்கள் கிடைக்காத காரணத்தினால்தான் களைக் கொல்லிகளைத் தெளிக்கிறோம், ஆனால் களைக்கொல்லிகள் தெளித்த பிறகும் புது விதமான களைகள் வளருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம். விதை உற்பத்தி நிறுவனங்களும், உரக்கடைகளும் விவசாயிகளுக்கு இந்தக் கொடுமையைச் செய்வதை நிறுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.