• July 24, 2025
  • NewsEditor
  • 0

அஜித்குமார் கொலை வழக்கில், திருமங்கலம் பேராசிரியை நிகிதாவிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றிருக்கிறது.

அஜித்குமார் கொலை வழக்கு

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது, மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் அளித்த நகைத் திருட்டுப் புகாரில் கடந்த 27 ஆம் தேதி திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற நிலையில்… மானாமதுரை டி.எஸ்.பி-யின் தனிப்படையினர் அஜித்குமாரை சட்டவிரோதமாக அழைத்துச் சென்று பல இடங்களில் வைத்து தாக்கியதில் உயிரிழந்தார்.

தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த, இந்த வழக்கு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். டி.எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சிவகங்கை எஸ்.பி இடமாற்றம் செய்யப்பட்டார்.

பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள். தொடர்ந்து, இதுகுறித்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றியதாக தெரிவித்தது.

நிகிதா

இதனையடுத்து டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த 14 ஆம் தேதி விசாரணையைத் தொடங்கினர். திருப்புவனம், மடப்புரம் கோயில் உட்பட அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, திருப்புவனம் காவல் நிலையத்திலும் ஆய்வு செய்தனர். அஜித்குமாருடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சக ஊழியர்கள், நண்பர்கள், கோயில் அலுவலர், ஊழியர், அரசு மருத்துவர்கள், காவல்துறையினர், அஜித்குமார் குடும்பத்தினர் என அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் 11 ஆவது நாளான இன்று இவ்வழக்கின் முக்கிய சாட்சியும், நகை காணாமல் போனதாக புகாரளித்தவருமான மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை நிகிதா, அவரது தாயார் சிவகாமி ஆகிய இருவரிடமும் மதுரை சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடந்தது.

கடந்த 27 ஆம் தேதி நிகிதா தாயாருடன் காரில் எங்கெங்கு சென்றார்? மருத்துவமனைக்கு சென்றாரா? நகைகளை எந்த இடத்தில் வைத்து கழற்றினார்? என்னென்ன வகையிலான நகைகள்… அவற்றுக்கான ரசீது, நகை காருக்குள் வைக்கப்பட்ட இடம் குறித்தும், கோயிலில் என்ன நடந்தது? அஜித்குமாரிடம் பேசியது என்ன ? திருப்புவனம் காவல் நிலையத்தில் என்ன நடந்தது? நிகிதா யார் யாருடன் மொபைலில் பேசினார்? என்பது குறித்தும் பல கேள்விகளை சிபிஐ அதிகாரி மோஹித்குமார் தலைமையிலான குழுவினர் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

மூன்று மணி நேரத்துக்கு மேலாக நடந்து விசாரணைக்குப் பின் நிகிதாவும் அவர் தாயாரும் கிளம்பிச் சென்றார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *