• July 24, 2025
  • NewsEditor
  • 0

கடந்த திங்கள்கிழமை ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் 49 பயணிகளுடன் சென்ற விமானம் சீன எல்லை அருகே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்திலிருந்த அனைவருமே உயிரிழந்துள்ளனர் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வானில் பறந்துகொண்டிருந்தபோது விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் விமானத்துடனான தொடர்பை இழந்துள்ளனர். சில நிமிடங்களில் மீட்பு பணியினர் காட்டில் எரிந்து சிதிலமடைந்துகொண்டிருந்த விமானத்தைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

Russia விமான விபத்து

அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அன்டோனோவ் An-24 விமானம்

ரஷ்யாவின் அமுர் பிராந்தியத்தில் உள்ள டிண்டா நகரில் இந்த விபத்து நடந்திருக்கிறது. மோசமான வானிலையால் தரையைப் பார்க்க முடியாத சூழலில் விமானி தரையிறங்க முயன்றதுதான் விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

உள்ளூர் அமைச்சகம் கூறுவதன்படி, சைபீரியாவைத் தளமாகக் கொண்ட அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அன்டோனோவ் An-24 விமானம், டிண்டா விமான நிலையத்தில் தரையிறங்கும் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தரையிறங்க முயற்சித்தபோது ரேடாரிலிருந்து மறைந்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் சோவியத் காலத்தைச் சேர்ந்த 50 ஆண்டுகள் பழமையான ஒன்று எனக் கூறப்படுகிறது. அதன் வால் பகுதியிலிருந்த எண்ணைக் கொண்டு 1976ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

அடர்ந்த காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானம் ஹெலிகாப்டரிலிருந்து படம்பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

அமுர் பிராந்திய கவர்னர் வாசிலி ஓர்லோவ் கூறியதன்படி, விபத்துக்குள்ளான விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகளும் 6 விமான குழுவினரும் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமுர் பிராந்தியம் மாஸ்கோவிலிருந்து 6,000 கி.மீ தொலைவில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ராபின்சன் ஆர்66 என்ற ஹெலிகாப்டரில் மூன்று பேர் பதிவு செய்யாத பயணத்தை மேற்கொண்டபோது இந்தப் பிராந்தியத்தில் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *