
பாட்னா: தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர ஆய்வு (எஸ்ஐஆர்) என்ற பெயரிலான வாக்காளர் பட்டியல் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதைக் கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தகுதி வாய்ந்த எந்த வாக்காளரின் பெயரும் விடுபட்டுவிடக் கூடாது; அதேநேரத்தில் தகுதியற்ற எந்த வாக்காளரின் பெயரும் இடம்பெறவும் கூடாது என்பதே இதன் நோக்கம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான அறிவிப்பை கடந்த ஜூன் 24-ம் தேதி வெளியிட்ட தேர்தல் ஆணையம், தொடர்ந்து வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வருகிறது.