
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், 4 கோடி ரூபாய் தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிப்பட்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்துவருகின்றனர். பல மாதங்களாக எவ்வித முன்னேற்றமும் இல்லாத அந்த வழக்கில், சில முக்கியமான ஆதராங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஸ்பீடு எடுத்திருக்கிறதாம் சி.பி.சி.ஐ.டி. குறிப்பாக, ‘சட்டத்துக்குப் புறம்பாகத் தங்கக்கட்டிகளைச் சில நகை வியாபாரிகளிடம் கொடுத்து, பணம் திரட்டப்பட்டிருக்கிறது. அந்தப் பணத்தை ரயிலில் எடுத்துச் செல்லும்போதுதான் பிடிபட்டிருக்கிறார்கள்’ என்று விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்களாம்.
இந்த வழக்கால், தாமரைக் கட்சியின் முக்கியப் புள்ளிக்குச் சிக்கல் கூடிக்கொண்டே போகிறதாம். “விரைவிலேயே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை…” என்கிறார்கள் சி.பி.சி.ஐ.டி வட்டாரத்தில். “இந்தச் சூழலில், வழக்கு சிக்கலிலிருந்து விடுபட ஆளும் தரப்பின் மேலிடப் புள்ளிகளிடம் சமரசப் பேச்சுவார்த்தையைச் செய்துவருகிறதாம் அந்த முக்கியப் புள்ளியின் தரப்பு!” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
மான்செஸ்டர் மாநகராட்சியின் ‘சக்சஸ்’ துணையானவரின் அடாவடி, நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறதாம். மாநகராட்சிப் பணிகளில் வசூல்வேட்டைக்காகவே, தன்னுடைய பகுதியில் தனி அலுவலகம் அமைத்திருக்கிறாராம் ‘சக்சஸ்’ பிரமுகர். சராசரியாக ஒரு அதிகாரி, 2-லிருந்து 3 லட்டுகள் வீதம் கொடுத்தே ஆக வேண்டும் என டார்கெட்டும் நிர்ணயித்திருக்கிறாராம். வசூல் மழையாகப் பொழிவதால், அதிலிருந்து பிரமாண்ட வீடு ஒன்றையும் கட்டிவருகிறாராம். “அந்த பிரமாண்ட வீட்டுக்கு வெளிநாடுகளிலிருந்து உயர் ரக கட்டுமானப் பொருள்களை இறக்குவதால், அதற்கான செலவு தற்போது அதிகரித்திருக்கிறது. அதனால், அதிகாரிகளுக்கான டார்கெட்டை அதிகரித்துவிட்டார். நாங்கள் என்ன பணம் அச்சடிக்கும் மெஷினா..?” எனப் புலம்புகிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்!
உறுப்பினர் சேர்க்கை முகாமை, தமிழகம் முழுவதும் பெரிய அளவில் நடத்திக்கொண்டிருக்கிறது ஆளும் தரப்பு. ஆனால், அந்த நிகழ்ச்சிகளில் எந்த ஆர்வமும் காட்டாமல் ஆப்சென்ட் ஆகிறாராம் தலைநகர் ‘ரயில்’ தொகுதியின் ‘பரம்பொருள்’ பிரமுகர். தொகுதியின் நிர்வாகிகள் பலரும் அவரை நிகழ்ச்சிக்குப் பலமுறை அழைத்தும்கூட, ஏதாவது காரணம் சொல்லித் தட்டிக்கழித்துக்கொண்டே இருக்கிறாராம் அவர். அந்த விவகாரமே சூட்டைக் கிளப்பியிருக்கும் நிலையில், தொகுதிப் பொறுப்பாளரான பெண் நிர்வாகியிடம் மரியாதையே இல்லாமல் சமீபத்தில் பேசி, வம்பில் மாட்டியிருக்கிறாராம் ‘பரம்பொருள்.’
கடுப்பான அந்தப் பெண் நிர்வாகி, ‘கட்சி வேலையும் செய்வதில்லை. தொகுதிக்கும் வருவதில்லை. வேலை செய்யும் எங்களையும் ஒருமையில் வசைபாடுகிறார்…’ என்று மேலிடத்துக்குப் புகாரைத் தட்டிவிட, விவகாரம் கொழுந்துவிட்டு எரிகிறது. ‘அடுத்த முறை சீட் கிடைப்பதில் சிக்கலாகிவிடுமோ?’ என அரண்டுபோன ‘பரம்பொருள்’ பிரமுகர், மாநகராட்சி அதிகாரிகளை அழைத்துக்கொண்டு தொகுதிக்குள் வலம்வர ஆரம்பித்திருக்கிறார். ஆனாலும், கட்சிக்காரர்களைத் துளியும் மதிப்பதில்லையாம்!
ஜில் மாவட்ட இலைக் கட்சியின் ‘அமைதி’ மாஜி எம்.எல்.ஏ-மீது ஒரு மோசடிப் புகார் பதிவானது. முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருப்பதால், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாகவே இருக்கிறார் அந்த ‘அமைதி’ பிரமுகர். உள்ளூரில் முன்ஜாமீன் கிடைக்காத காரணத்தால், தலைநகரில் தங்கி, மேலிட உதவியுடன் முன்ஜாமீனுக்கான வேலைகளைச் செய்துவருகிறாராம். இதில் இன்னொரு உள்விவகாரத்தையும் சொல்கிறார்கள் இலைக் கட்சி வட்டாரத்தில். ‘அந்த அமைதி மாஜியைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பதே ஆளுங்கட்சியின் மாவட்ட உச்ச பிரமுகர்தான். சமுதாயப் பாசம்தான் அவர்களை இணைத்து, இப்போது ஓரணியில் இணைந்து செயல்படவைத்திருக்கிறது’ எனக் காதைக் கடிக்கிறார்கள். ‘தேர்தல் நெருங்கும் நிலையில், எதிர்த் தரப்பின் தவறுகளைப் போட்டு உடைக்காமல், இப்படிப் பாதுகாத்துவருகிறாரே நம்ம மாவட்டம்’ என்று சூரியக் கட்சிக்குள்ளும் இப்போது புகைச்சல் கிளம்பியிருக்கிறது!
இலைக் கட்சியின் ‘ராஜ’ பிரமுகர் சூரியக் கட்சிக்குத் தாவிய நிலையில், “இரண்டெழுத்து மாஜியும் தாவப்போகிறார்…” என்ற செய்தி, தூங்கா நகர ரத்ததின் ரத்தங்களைத் தூங்கவிடாமல் செய்திருக்கிறதாம். இந்தச் செய்திக்குப் பின்னால் சில அரசியல் நகர்வுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள். அதாவது, “இரண்டெழுத்து மாஜி, சமீபத்தில் தன்னிடமிருந்த ஸ்வீட் பாக்ஸுகளைப் பறிகொடுத்திருந்தார். அவற்றை மீட்டெடுப்பதற்கு, ஆளும் தரப்பின் ‘கீர்த்தி’ மாண்புமிகுதான் பெரும் உதவிகளைச் செய்தார். `நம்ம பக்கம் வந்துவிடுங்களேன்…’ என அந்த மாண்புமிகு பேசிப் பார்த்தபோது, ‘நீங்கள் செய்த உதவிக்குக் கைம்மாறாக, என் கட்சியில் என்னுடைய செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்கிறேன். ஆனால், உங்கள் பக்கம் வர முடியாது’ என அன்பாய் மறுத்துவிட்டார் இரண்டெழுத்து மாஜி” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!