
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வனத்துறையின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வனத்தைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 8, 9,10ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தலையணை வனப்பகுதிக்குள் வனத்துறை சார்பில் பள்ளி மாணவர்கள் வனத்தைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் ஒரு நாள் பயணமாக வனத்திற்குள் எட்டு கிலோமீட்டர் ட்ரக்கிங் சென்றனர். செல்லும் வழியில் உள்ள பறவைகள், பட்டாம்பூச்சிகள், தாவரங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
யானை, சிறுத்தை, காட்டு மாடு, செந்நாய், புள்ளிமான் போன்ற விலங்குகள் வசிக்கும் காட்டிற்குள் ஒரு நாள் இயற்கை பயணமாக மாணவர்கள் ட்ரக்கிங் செய்ததோடு மட்டுமல்லாமல் அங்குள்ள தாவரங்கள், யானை குறித்து ஆர்வத்துடன் மாணவர்கள் கேட்டறிந்தனர். இந்த வனப் பயணத்தின் போது இயற்கையைப் பாதுகாப்பது குறித்தும், மனித வாழ்வில் வனத்தின் தேவை குறித்தும் மாணவர்களுக்கு வனத்துறையினர் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் பத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வனப்பகுதிக்குள் இயற்கையை ரசித்தபடி, வன உயிரினங்களின் வாழ்விடங்கள் குறித்து கேட்டிருந்தனர்.
நாங்க காட்டுக்குள் ட்ரக்கிங் போனோம், ரெம்ப சந்தோஷமா இருக்கு. காட்டுக்குள்ள போகும்போது வண்ணத்துப்பூச்சி, பறவைகள், பறவைகளின் சத்தம் இதெல்லாம் எங்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்தது. மேலும் அடர்ந்த வனப் பகுதிக்குச் சென்றது நெகிழ்ச்சியாக இருந்ததாகவும் பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த முகாமில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழும், வனத்துறையைச் சார்ந்த புத்தகங்கள் அடங்கிய பரிசுப் பையும் வழங்கப்பட்டது. மேலும் வனப்பகுதியில் வந்து குறிப்பெடுத்த மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டது.