
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இங்கிலாந்திற்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் அவரின் வெளிநாட்டு பயணம் குறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கு செல்வது தவறில்லை. ஆனால் நாடாளுமன்றம் நடக்கும்போதும் அவர் வெளிநாடு செல்வதுதான் பிழையான அரசியலாகும்.
ஏனெனில் நாடாளுமன்றம் என்பது மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் கேள்விகளும், விவாதங்களும் நிகழும் அரசியல் மன்றமாகும்.
அதனை தவிர்ப்பதோ, அலட்சியப்படுத்துவதோ ஜனநாயகத்தை சிறுமைப்படுத்துவதாகும்.
* ஆப்ரேஷன் சிந்தூர் குறித்த சர்ச்சைகள்
* பீஹாரில் வாக்குகள் களவாடப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள்
* துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கரின் திடீர் ராஜினாமா குறித்த ஐயங்கள்
* நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பணம் குவிந்திருந்தது குறித்த கேள்விகள்
என வெப்பமடிக்கும் அரசியல் சூழலில், பிரதமர் வெளிநாடுகளுக்கு பறக்கிறார். இது எதிர்கட்சிகளுக்கு அஞ்சி தப்பி ஓடுவதாகவே கருதப்படும்!” என்று பதிவிட்டிருக்கிறார்.