
குறுவை சாகுபடியில் நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே பயிர்க் காப்பீடு செய்யலாம் என்ற நிலையை மாற்றி, குத்தகைதாரர்களும் பயிர்க் காப்பீடு செய்ய தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.
விவசாயிகள் சாகுபடி செய்யும்போது, எதிர்பாராத மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால், அதில் இருந்து விவசாயிகளை பாதுகாத்துக் கொள்ள பயிர்க் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புத் தொகை, விவசாயிகளின் பிரீமியத் தொகையை கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் குறுவை (காரீப்), சம்பா (ராஃபி) பருவத்தில் பயிர்க் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், குறுவை பருவத்தில் சாகுபடி செய்த விவசாயிகள் ஜூலை 31-ம் தேதி வரை பயிர்க் காப்பீடு செய்ய வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.