
பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அவர்களின் விருப்ப ஆடையை அணிந்து, அதன்மீது கறுப்பு நிற அங்கியை அணிந்து வருவார்கள். இந்த நிலையில் கடந்த 2024 ஆகஸ்ட் 23 அன்று, `பட்டமளிப்பு விழாவில் அணியப்படும் கறுப்பு நிற ஆடை ஆங்கிலேய ஆட்சியர்களால் தங்கள் காலனி ஆதிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் அமைந்திருக்கும் மாநிலங்களின் பாரம்பர்யத்திற்கு ஏற்ப பட்டமளிப்பு விழா ஆடைகளை நிர்ணயித்துக் கொள்ளலாம்’ என மத்திய அரசு மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.
`இந்த உத்தரவுக்கு நீதிபதிகளுக்கு பொருந்துமா?’ என அப்போதே எதிர்க் கருத்துகள் எழுந்தன. இந்த நிலையில்தான் பட்டமளிப்பு விழாவுக்கான ஆடைக் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஜிப்மர் நிர்வாகம். அதில், `சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ஜிப்மர் பட்டமளிப்பு விழாவுக்கு பாரம்பர்ய உடைகளை அங்கீகரித்திருக்கிறது. அதனால் வரவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் நேரடியாக பட்டங்கள் பெறும் மாணவர்கள் கட்டாயம் ஆடைக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். அன்றைய தினம் ஜிப்மர் நிர்வாகம் கூறும் பாரம்பர்ய உடைகளைத் தவிர வேறு உடை அணிந்து வருபவர்களுக்கு கட்டாயம் அனுமதி இல்லை.
ஆண்களுக்கான இந்திய பாரம்பர்ய உடை என முழுக்கையுடன் கூடிய பைஜாமா அல்லது, வெள்ளை நிற வேட்டி அணிந்து வர வேண்டும். அதேபோல அவர்கள் கறுப்பு, பிரவுன் நிறத்திலான ஷூவை மட்டுமே அணிய வேண்டும். சேண்டல்கள், செருப்பு அணிந்து வர அனுமதியில்லை. பெண்களுக்கான இந்திய பாரம்பர்ய உடை என தங்க நிற பார்டருடன் கூடிய வெள்ளை நிற சேலையும், அதற்கு தங்க நிற ஜாக்கெட் அணிய வேண்டும். அல்லது தங்க நிற பார்டருடன் கூடிய வெள்ளை நிற முழுக்கை சுடிதார் அல்லது சல்வார் கமீஸ் அணியலாம். காலணிகளை பொறுத்தவரை நடக்கும்போது சத்தம் வராத காலணிகளை அணிந்து வரலாம்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உத்தரவு மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. `மத்திய அரசு கல்வி நிறுவனமான ஜிப்மரில் இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு பார்ம்பர்ய உடைகள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது உத்தரவில் கேரள மாநிலத்தின் பாரம்பர்ய உடைகள் குறிப்பிட்டிருப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?’ என்று மாணவர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.