
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சரவணன் மற்றும் தனிப்பிரிவு காவலர் ராஜேஷ், மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் செல்வேந்திரன் ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சேங்கனூரில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு அனுமதி பெற்ற பார் வசதி இல்லை. இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் டாஸ்மாக்கில் மொத்தமாக மது பாட்டில்கள் வாங்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்துள்ளனர்.
இது குறித்து, நன்னிலம் காவல் நிலையத்தில் சிலர் புகார் அளித்துள்ளனர். இதைதொடர்ந்து நன்னிலம் போலீஸார் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதை உறுதி செய்ததுடன் மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து அதில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்தனர். அதன் பின்னர், கைது செய்யப்பட்ட நபர்களின் செல்போனை பெற்று அதில் யாரெல்லாம் பேசியிருக்கிறார்கள் என ஆய்வு செய்தனர்.
இதில் சரவணன், ராஜேஷ், செல்வேந்திரன் ஆகிய 3 போலீஸார் மது விற்பனையில் ஈடுப்பட்ட நபர்களிடம் அடிக்கடி பேசியுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்களை தடுக்காமல், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் அவர்களிடம் இருந்து ஆதாயம் அடைந்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, திருவாரூர் மாவட்ட எஸ்.பி கருண் கரட் மூன்று போலீஸாரையும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.