• July 24, 2025
  • NewsEditor
  • 0

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் (30.) இவரின் மனைவி அபிராமி (25). இந்தத் தம்பதியினிருக்கு அஜய் (6) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.

குழந்தைகள் கொலை

அபிராமிக்கும், அதே பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மாஸ்டர் மீனாட்சி சுந்தரம் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இந்தநிலையில் கடந்த 2018-ல் அஜய், கார்னிகா ஆகியோர் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அபிராமி தலைமறைவாகியிருந்தார்.

இதுகுறித்து விஜய், குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் தெரியவந்தது. அதோடு அவர்களின் முகத்தை தலையணையால் அமுக்கியிருந்ததும் ரிப்போர்ட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

குன்றத்தூர் அபிராமி

இதையடுத்து குன்றத்தூர் போலீஸார் அபிராமியைத் தேடினர். அப்போது அவர் பேருந்தில் தென்மாவட்டத்துக்கு பயணம் செய்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அபிராமியைப் பிடித்து விசாரித்தபோது பிரியாணி மாஸ்டர் மீனாட்சி சுந்தரத்துக்கும் இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை, காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜராகி வந்தார். குன்றத்தூர் போலீஸார், குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ததோடு சாட்சிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனால் இந்த வழக்கு விசாரணை துரிதமாக நடந்து வந்தது.

`கருணை எதுவும் காட்ட முடியாது’

குறுக்கு, சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் இன்று (24-7-2025) நீதிபதி செம்மல் தீர்ப்பு வழங்கினார். இதற்காக சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அபிராமியும் மீனாட்சி சுந்தரமும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி செம்மல், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அபிராமியும் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பளித்தார்.

அடுத்து தீர்ப்பின் விவரத்தை நீதிபதி செம்மல் வாசித்தார். அப்போது அபிராமி, எனக்கு வயதான பெற்றோர்கள் இருக்கிறார்கள். 7 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டேன். அதனால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கண்ணீர்மல்க தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி, `குழந்தைகளை கொலை செய்தவர்களுக்கு கருணை எதுவும் காட்ட முடியாது. அதனால் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கிறேன்’ என தீர்ப்பளித்தார். அதைக்கேட்ட அபிராமி நீதிமன்றத்திலேயே கதறி அழுதார். அதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அபிராமியையும் மீனாட்சி சுந்தரத்தையும் போலீஸார் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *