
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதம் சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, ஓய்வூதியம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள அலுவலர் குழுவை வாபஸ் பெறுவது, பணிக்கொடை (கிராஜூவிட்டி) மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.