
மராத்தி பேசாதவர்கள் மீது தாக்குதல்..
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தியில் பேச வேண்டும் என்று கூறி வருகிறார். இதற்காக அவரது கட்சி தொண்டர்கள் பொது இடத்தில் மராத்தி பேசாதவர்களை கண்டுபிடித்து மராத்தியில் பேசும்படி கூறி வருகின்றனர்.
அதோடு இதை யாராவது எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்களை அடித்து உதைக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது. அது போன்ற காரியத்தில் ஈடுபடுபவர்களை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.
ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இதனால் மும்பையில் சில வியாபாரிகளை ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவினரால் தாக்கப்பட்டனர்.
வன்முறையில் இறங்கும் ராஜ் தாக்கரே கட்சி..
தற்போது, மேலும் ஒரு சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட்டில் நடந்திருக்கிறது. அங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்த கழிப்பறைக்கு சென்ற சிலர் அங்கிருந்த ஊழியரிடம் பெண்களிடம் கழிவறையை பயன்படுத்த ரூ.5 கட்டணம் வசூலிப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதனை ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தார். கழிவறையில் இருந்த ஊழியர் இந்தியில் பேசினார். உடனே அவருடன் வாக்குவாதம் செய்த நபர் மராத்தியில் பேசும்படி கூறினார்.
அதற்கு கழிவறை ஊழியர், மராத்தியில் பேசாவிட்டால் என்ன செய்வாய், உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று தெரிவித்தார். அவருடம் மராத்தியில் பேச வேண்டும் என்று சொன்ன நபருடன் ஒரு பெண்ணும் நின்றார். அவரும் கழிவறை ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அவர்கள் வீடியோ எடுத்து அதனை ராஜ் தாக்கரேயிக்கு அனுப்புவோம் என்று அவர்கள் மிரட்டினர். அதோடு மராத்தி பேசுகிறாரா இல்லையா என்பது நாளைக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு சென்ற அவர்கள் வீடியோவை அங்குள்ள மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பிவைத்தனர்.

அந்த வீடியோவை பார்த்த நவநிர்மாண் சேனா கட்சியினர் பேருந்து நிலையத்திற்கு வந்து கழிவறை ஊழியரை சுற்றி வளைத்து அடித்தனர். மராத்தி பேசுவாயா மாட்டாயா என்று கேட்டு அடித்தனர். உடனே அந்த ஊழியர் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க முன்வந்தார். அதற்கு ராஜ் தாக்கரே கட்சினர் மராத்தி தெரியவில்லை எனில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும் கழிவறை ஊழியரிடம், மராத்தி மக்களிடமும், ராஜ் தாக்கரேயிடம் மன்னிப்பு கேட்பதாகவும், இனி இது போன்று தவறு செய்யமாட்டேன் என்று சொல்லவைத்து மன்னிப்பு கேட்க வைத்தனர். இது தொடர்பாக இரண்டு வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.
ராஜ் தாக்கரே கட்சியினர் மொழிக்காக அப்பாவி மக்களை அடித்து உதைத்துக்கொண்டிருப்பது குறித்து மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் கவலை தெரிவித்தார். இச்செயல் மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அரசு
மகாராஷ்டிராவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் மாநகராட்சி உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்கான வேலைகள் முழு அளவில் நடந்து வருகிறது. இத்தேர்தலை கருத்தில் கொண்டே ராஜ் தாக்கரே கட்சியினர் மொழிப்பிரச்னையை கையில் எடுத்து இருக்கின்றனர். எனவேதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மாநில உள்துறை அமைச்சகம் தயங்கி வருகிறது.
இப்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் அது மராத்தியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. எனவேதான் இப்போது ராஜ் தாக்கரே கட்சியினரின் செயலை மாநில அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அதோடு ராஜ் தாக்கரே இன்னும் எந்த கூட்டணியில் இருக்கிறார் என்று தெளிவாக சொல்லவில்லை.
ராஜ் தாக்கரேயை தங்களது கூட்டணிக்கு இழுத்து வரவேண்டும் என்று உத்தவ் தாக்கரே முயன்று வருகிறார். ஆனால் ராஜ் தாக்கரே இதற்கு இன்னும் தெளிவான பதில் கொடுக்காமல் இருக்கிறார். பா.ஜ.கவும் ராஜ் தாக்கரேயை தங்களது பக்கம் கொண்டு வர முயன்று வருகிறது. ஆனால் பா.ஜ.க கூட்டணியில் ஏற்கனவே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இருப்பதால் பா.ஜ.க., ராஜ்தாக்கரே விவகாரத்தில் தயங்கிக்கொண்டிருக்கிறது.