
புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் பிஹாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என விமர்சித்தனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 4-ம் நாளான இன்று (ஜூலை 24), நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக மகர் துவார் பகுதியில் கூடிய எதிர்க்கட்சி எம்பிக்கள், பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர ஆய்வு (எஸ்ஐஆர்) என்ற பெயரிலான வாக்காளர் பட்டியல் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை 'ஜனநாயத்தின் மீதான தாக்குதல்' என்ற பேனரை பிடித்தபடி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.