
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை தமிழகத்தில் அதிகளவு எழுதுகிறார்கள். இந்தாண்டு நடத்தப்பட்ட தேர்வு சரியில்லை. துணை ஜனாதிபதியாக தமிழர் அல்லது நல்லவர் யார் வந்தாலும் மகிழ்ச்சி.
என்னுடைய கட்சி பணிகளை ஒரு சதவிகிதம் கூட குறைக்கவில்லை. செய்தியாளர்களை சந்திக்கும் இடத்தில் பலர் உள்ளனர். அதனால் செய்தியாளர்களை அதிகம் சந்திக்கவில்லை. கட்சியாக பார்த்து எனக்கு பொறுப்பு கொடுக்கும்போது கொடுக்கட்டும்.
திமுக 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். மக்கள் மனதில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்கிற கோபம் உள்ளது. இதற்கு முன்பு திமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. அதை நோக்கி தான் இந்த தேர்தலும் செல்கிறது. முதலமைச்சர் வெளியில் வந்து ஒரு கிராமத்தில் 2 நாள்கள் தங்கி, மக்களிடம் பேசினால் தான் அவர்களின் மனநிலை தெரியும்.
அவர்கள் என்ன சர்வே எடுத்தாலும் தோல்வி உறுதி. திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியில் செல்ல வேண்டும். இன்னும் தேர்தலுக்கான சூடே ஆரம்பிக்கவில்லை. விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணி முழு வடிவம் பெறும்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கிய போது நான் கலந்துகொள்ள கூடாது என்று நினைக்கவில்லை. எல்லோருக்கும் பல வேலைகள் இருக்கும். கட்சி சார்பாக யார் கலந்து கொள்ள வேண்டும். அமித்ஷா சென்னை வந்தபோது, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்டார்.

அதில் எந்த குழப்பமும் இல்லை. எதிர்க்கட்சிகள் வேண்டுமென்று எதையாவது பரப்புகிறார்கள். மதுரையை போல அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஊழல் நடந்துள்ளது. அங்கு எல்லாம் தணிக்கை செய்ய வேண்டும்.” என்றார்.