
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.
2026 தேர்தலுக்காக நாளை உரிமை மீட்பு பயணத்தை அன்புமணி தொடங்க உள்ள நிலையில், பாமக கொடியையும், கட்சி பெயரையும் பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக்கோரி இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
தைலாபுரத்தில் இன்று (ஜூலை 24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ராமதாஸ், “சிறப்பு பொதுக்குழுவின் படி பாமக செயல்தலைவராக அன்புமணி தொடர்வார். தன்னை தலைவர் எனக் கூறிக்கொண்டால் நடவடிக்கை பாயும்.
நடைப்பயணத்தின் போது பாமக கொடியை யாரும் பயன்படுத்தக்கூடாது. அன்புமணியின் நடை பயணத்திற்கு தடை விதிக்கக்கோரி டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாமக தலைமையகம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. பாமகவிற்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. தொண்டர்களும், நிர்வாகிகளும் இனி வேறெங்கும் செல்ல வேண்டாம்” என்று தெரிவித்திருக்கிறார்.