
கவுனி அரிசியானது கருப்பு கவுனி அரிசி என்றும் அழைக்கப்படுகிறது. இது பல்வேறு உடல்நல நன்மைகளைக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, இந்த அரிசி ரகத்தில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாகவும் கருதப்படுகிறது.
அதனால், இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், புற்றுநோய் மற்றும் செரிமான பிரச்னைகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும் என்றும் சொல்கிறார்கள்.
இப்படி, இது போன்று பல்வேறு விதமான உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய கவுனி அரிசி பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு, பொதுமக்கள் தற்போது வாங்கி வருகின்றனர்.
இதனால், தமிழகத்தில் பல பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் ஆங்காங்கே இந்தக் கருப்பு கவுனி நெல் ரகத்தைப் பயிரிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள பாப்பம்பட்டி, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1,200 க்கும் மேற்பட்ட ஏக்கரில் கவுனி நெல்லை சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படி இந்த நெல் ரகத்தைச் சாகுபடி செய்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்த ஆண்டு, அதேபோன்று கவுனி நெல் விவசாயம் செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட கவுனி நெல் கிலோவிற்கு 85 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்து வந்த நிலையில், தற்பொழுது 22 ரூபாய்க்கு மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
இதுபற்றி, அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலரிடம் பேசினோம்.
“இந்த ரக நெல் மருத்துவக் குணம் கொண்டது என்று சொல்லப்பட்டதால், விவசாயிகள் நாங்கள் இந்த ரகத்தைக் கடந்த சில வருடங்களாகப் பயிரிட்டு வருகிறோம். இந்த வருடமும் பயிர் செய்தோம்.
விவசாயிகள் நாங்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் உள்ள நகை உள்ளிட்டவற்றை அடமானம் வைத்தும், வங்கிகளில் கடன் பெற்றும் அவரவர் வயல்களில் மூன்று மாதங்களாக கவுனி நெல் சாகுபடி செய்து வருகிறோம்.

அதாவது இந்த மூன்று மாத காலமாக விதை நெல் தூவி, உழவு பணி, வரப்பு வெட்டுதல், நடவு செய்தல், நாற்று பறித்தல், குப்பை போடுதல், உரம் தெளித்தல், களை எடுத்தல் நெல் அறுவடை செய்தல் என ஒரு ஏக்கருக்கு இருபதாயிரம் வரை செலவு செய்யப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகள் விற்பனை செய்து கணிசமான லாபம் பெற்று வந்தோம்.
ஆனால், தற்பொழுது செலவு செய்த பணம் கூட கிடைக்காமல் விலை போகிறது. பாப்பம்பட்டி, பாரதிநகர் மட்டுமின்றி திருமயம் தாலுகாவைச் சுற்றியுள்ள தவசுமலை, வி.லட்சுமிபுரம், விராச்சிலை, நெய் குளம், குழிபிறை, பணியப்பட்டி, ஆலவயல், மேலூர், கடியாபட்டி, புலிவலம், லெம்பலக்குடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 10,000 ஏக்கரில் பாரம்பர்ய நெல் வகையான கவுனி நெல்லை சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது, போதிய விலை கிடைக்காததால் டன் கணக்கில் மூட்டை மூட்டையாக அறுவடை செய்யப்பட்ட கவுனி நெல் மூட்டைகளை வீட்டில் குவித்து வைத்துள்ளோம்.
மேலும், பாதி அளவு கதிர்கள் வயல்களில் அறுவடை செய்யப்படாமல் அப்படியே விட்டு வைத்துள்ளோம். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு கவுனி நெல்லுக்குக் கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும்.
அமைச்சர் ரகுபதியின் தொகுதியான திருமயம் தொகுதியில் விவசாயிகளின் கோரிக்கைகளை இதுநாள் வரை காது கொடுத்துக் கேட்கவில்லை.
