
புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த 25 வருடங்களாக பராமரிப்பில்லாமல் இருக்கும் குன்றாண்டார் கோயிலை புனரமைக்க ரூ. 12 லட்சம் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, திருச்சி எம்.பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தனது சமூகவலைதள பக்கத்தில் செய்துள்ள பதிவில்,
“எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 25 ஆண்டுகளாக உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத குன்றாண்டார் கோயில் சம்பந்தமாக, ஒன்றிய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகத்திற்கு நான் எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள் 21.07.2025 அன்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார்.
அதில், ‘குன்றாண்டார் கோயில் பகுதியில் அமைந்துள்ள பாறை குடவறை சிவன் கோயில், பீடத்தின் முகப்பில் சக்கரம் பொறுத்தப்பட்ட தேர் மண்டபம் ஆகியவை இந்திய தொல்லியல் கண்காணிப்பகத்தின் (ASI) கட்டுப்பாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இதற்கு ஒதுப்படும் நிதி குறித்த எனது கேள்விக்கு, வருடாந்திர பாதுகாப்பு திட்டம் (ACP) தயாரிக்கப்பட்டு, நடப்பு நிதியாண்டில் (2025-26) ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பதிலளிக்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டால் குன்றாண்டார் கோயில் புனரமைக்கப்பட்டு பொழிவுபெறும்.
இதனால், பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பெருமளவில் இப்பகுதிக்கு வருகை தரக்கூடுமென்றும், அதனால் இப்பகுதி மக்களின் பொருளாதாரம் மேம்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.