
‘நான்காவது போட்டி…’
இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஒல்ட் ட்ராஃபர்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை எடுத்திருந்தது. தமிழக வீரர் சாய் சுதர்சன் 61 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவரின் முதல் அரைசதம் இது. நேற்றைய நாளுக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்க வந்திருந்த சாய் சுதர்சன் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.
‘பத்திரிகையாளர் சந்திப்பு…’
சாய் சுதர்சன் பேசியதாவது, ‘ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் போது டைரியில் என்ன எழுதிக் கொண்டிருப்பேன் என கேட்கிறீர்கள். நான் எதையும் எழுத மாட்டேன். எதாவது ஓவியம் வரைந்துக் கொண்டிருப்பேன். போட்டி தீவிரமாக சென்று கொண்டிருக்கையில் என்னை நிதானப்படுத்திக் கொள்ள எதாவது வரைவேன்.
‘விக்கெட் கொஞ்சம் கஷ்டம்…’
இன்றைய நாளை பொறுத்தவரைக்கும் விக்கெட் ‘Two Pace’ ஆக இருந்தது. பந்தின் வேகத்தையும் பவுன்சையும் கணிப்பது கடினமாக இருந்தது. மேகங்கள் சூழ்ந்தே இருந்ததால் பந்தும் நாள் முழுவதும் மூவ் ஆகிக் கொண்டே இருந்தது.

முதல் போட்டிக்குப் பிறகு நான் ட்ராப் செய்யப்பட்டேன். அப்போது சுப்மன் கில் என்னிடம் வந்து நான் எதற்காக ட்ராப் செய்யப்பட்டேன் என்று முழு விளக்கத்தையும் கொடுத்தார். அணிக்கு வேறு மாதிரியான காம்பீனேஷன் தேவைப்படுவதால்தான் ட்ராப் செய்யப்பட்டேன் என்பதை தெளிவுப்படுத்தினார். கில் எப்போதுமே எல்லா வீரர்களுடனும் தொடர்பில் இருக்ககூடிய நல்ல கேப்டனாக இருக்கிறார். ஒரு வீரரிடமிருந்து அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை தெளிவாகக் கூறிவிடுவார்.
‘பண்ட் வலியால அவதிப்பட்டாரு!’
இந்திய அணியில் இடம்பிடித்து ஆடுவதை நான் ஒரு அழுத்தமாக பார்க்கவில்லை. இதை ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கிறேன். இதன் மூலம் இந்திய அணிக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய விரும்புகிறேன். அறிமுகப் போட்டியில் ஆடினாலும் சரி, எதாவது வீரருக்குப் பதில் வாய்ப்பு கிடைத்து ஆடினாலும் சரி, என்னுடைய மனநிலை இதுதான்.

ரிஷப் பண்ட் கடுமையான வலியால் அவதிப்பட்டார். அவரை ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவரின் உடல்நிலையைப் பற்றிய விவரம் இனிதான் தெரிய வரும். ஒருவேளை அவரால் ஆட முடியவில்லையெனில் ஒரு பேட்டரை நாங்கள் இழப்போம். அது எங்களுக்கு பின்னடைவுதான். ஆனால், எங்களிடம் நிறைய ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். அதனால் சமாளித்துவிடுவோம் என நினைக்கிறேன்.’ என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…