
இங்கிலாந்துக்கெதிரான நடப்பு டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்கான கடைசி வாய்ப்பாகவும், 2 -1 என பின்தங்கியிருக்கும் தற்போதைய நிலையை சமன்படுத்தவும் மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நேற்று (ஜூலை 23) களமிறங்கியது சுப்மன் கில் தலைமையிலான இந்தியா.
இந்த மைதானத்தில் டெஸ்டில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்த எந்தவொரு அணியும் வென்றதே இல்லை என்ற சூழலில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்தார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.
மறுபக்கம், மான்செஸ்டரில் ஒன்பது டெஸ்டுகளில் ஆடியிருக்கும் இந்திய அணி அதில் ஒன்றில் கூட வென்றதே இல்லை.
எனவே, மான்செஸ்டரில் ஒரு வரலாற்று திருத்தம் நிகழப்போகும் இப்போட்டியில், ஜெய்ஸ்வாலும், கே.எல். ராகுலும் ஓப்பனிங் இறங்கினர்.
ராகுல், ஜெய்ஸ்வாலின் சிறப்பான தொடக்கம்!
பவுலிங்குக்கு சற்று ஒத்துழைத்த இந்தப் பிட்சில், இருவரும் கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் மும்முனை வேகத் தாக்குதலை சிறப்பாக எதிர்கொண்டு அரைசத பார்ட்னர்ஷிப்பைக் கடந்தனர். முதல் சேஷனை விக்கெட்டை இழப்பின்றி முடித்தனர்.
மதிய உணவு இடைவேளைக்குப் பின் அந்த அரைசத பார்ட்னர்ஷிப்பை இருவரும் சதமாக மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், ராகுலை 46 ரன்களில் அவுட்டாக்கினார் வோக்ஸ்.

கேட்சிலிருந்து தப்பித்த சாய் சுதர்சன்!
பின்னர், ஜெய்ஸ்வாலுடன் கைகோர்த்தார் தமிழக வீரர் சாய் சுதர்சன்.
மறுமுனையில், நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வால் இந்தத் தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தார்.
அதேசமயம், இரண்டாவது முறையாக கிடைத்திருக்கும் வாய்ப்பில் தன்னை நிரூபித்தாக வேண்டும் என்ற நெருக்கடியோடு ஆடிக்கொண்டிருந்த சாய் சுதர்சன், 20 ரன்களில் ஸ்டோக்ஸின் ஓவரில் விக்கெட் கீப்பரின் தவறால் கேட்சிலிருந்து தப்பித்தார்.
கேப்டனை அவுட்டாக்கிய கேப்டன்… மீண்டும் காயத்துக்குள்ளான பண்ட்!
அதேசமயம், 8 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம்பிடித்த லியாம் டாசன் சுழலில் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து 58 ரன்களில் வெளியேறினார் ஜெய்ஸ்வால்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கில்லை 12 ரன்களிலே எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார் கேப்டன் ஸ்டோக்ஸ்.
Chapter Four: Manchester
Catch all of the action from Day 1 at Emirates Old Trafford
— England Cricket (@englandcricket) July 23, 2025
அதன்பிறகு இணைந்த சாய் சுதர்சன் – ரிஷப் பண்ட் கூட்டணி எதிரணி பவுலர்களுக்கு விக்கெட் வாய்ப்பே கொடுக்காமல் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பைக் கடந்தனர்.
கூடவே, சாய் சுதர்சனும் தனது டெஸ்ட் கரியரில் முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

இந்தக் கூட்டணி 70 ரன்களைக் கடந்து ஆடிக்கொண்டிருந்தபோது, கிறிஸ் வோக்ஸ் பந்தை ரிவர்ஸிவீப் ஆட முயன்ற பண்ட், பந்து பேட்டில் எட்ஜ் ஆகி நேராக கால் நுனியில் தாக்கியதால் வலியால் துடித்து 37 ரன்களில் ரிட்டயர்டு ஹர்ட் ஆகி களத்திருந்து வெளியேறினார்.
அதைத்தொடர்ந்து, லார்ட்ஸ் அலோன் வாரியர் ஜடேஜா களத்துக்குள் வந்தார்.
இந்த நேரத்தில், மான்செஸ்டரில் 1990-ல் சதமடித்த சச்சினுக்குப் பிறகு முதல் இந்தியராக சதமடிக்கும் வாய்ப்பில் ஆடிக்கொண்டிருந்த சாய் சுதர்சன், ஸ்டோக்ஸின் பவுன்சரை தூக்கியடிக்க முயன்று கேட்ச் அவுட்டாகி 61 ரன்களில் வெளியேறினார்.
COMEBACK STRONG, RISHABH PANT. pic.twitter.com/eTNeOV1wI2
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 23, 2025
இந்த விக்கெட்டோடு அணியில் பேட்ஸ்மென்களின் கோட்டாவும் முடிந்ததும். அடுத்து களமிறங்கிய ஷர்துல் தாகூரும், ஏற்கெனவே களத்திலிருந்த ஜடேஜாவும் தலா 19 ரன்கள் எடுத்திருந்த வேளையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியில் கேப்டன் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.