• July 24, 2025
  • NewsEditor
  • 0

கேரள மாநில முன்னாள் முதல்வரும், சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 21-ம் தேதி காலமானார்.

அவரது உடல் நேற்று முன் தினம் திருவனந்தபுரத்தில் இருந்து ஆலப்புழாவுக்கு கொண்டுசெல்லப்பட்டது. வி.எஸ்.அச்சுதானந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்றனர். இதையடுத்து இறுதி ஊர்வலம் ஆலப்புழாவுக்கு சென்றடைய 22 மணி நேரம் ஆனது.

வி.எஸ்.அச்சுதானந்தின் சொந்த ஊரான ஆலப்புழா வேலிக்ககத்து வீட்டிலும், ஆலப்புழா மாவட்ட சி.பி.எம் அலுவலகத்திலும் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பெரும் மழையையும், சூறை காற்றையும் பொருட்படுத்தாமல் வி.எஸ்.அச்சுதானந்தன் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

வி.எஸ்.அச்சுதானந்தன் உடலுக்கு வழிநெடுகிலும் அஞ்சலி செலுத்திய மக்கள்

நேற்று மாலை ஆலப்புழா கடற்கரையில் உள்ள ரீகிரியேஷன் கிரவுண்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. முழு அரசு மரியாதையுடன் அச்சுதானந்தனின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.

ரிகிரியேஷம் கிரவுண்டில் வைத்து போலீசார் மரியாதை செலுத்தினர். பின்னர் அச்சுதானந்தன் உடலில் தேசிய கொடி போர்த்தப்பட்டது. பின்னர் அவரது உடல் வலியசுடுகாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

நேற்று இரவு 8.50 மணிக்கு ஆலப்புழா வலிய சுடுகாட்டுக்கு வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் கொண்டு செல்லப்பட்டது. 9.15 மணிக்கு சுடுகாட்டில்  அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மகன் அருண் குமார் இறுதிச்சடங்குகளை செய்தார். மகள் ஆஷா, மருமகன் தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் உள்பட பலர் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர்.

சுடுகாட்டு பகுதியில் வி.எஸ்.அச்சுதானந்தனின் குடும்பத்தினரும், முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

சி.பி.எம் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் தகனம் செய்யப்பட்டது

இறுதிச்சடங்கு முடிந்த பின்னர் வலியசுடுகாடு பகுதியில் நடந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “நவீன கேரளத்தை உருவாக்கிய சில சிற்பிகளில் முக்கியமானவராக இருந்தார் வி.எஸ்.அச்சுதானந்தன்” என்றார்.

சி.பி.எம் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி பேசுகையில், “இக்கட்டான காலகட்டத்திலும் பதற்றமின்றி கட்சியை வழிநடத்தியவர் வி.எஸ்.அச்சுதானந்தன். தன் வாழ்கை முழுவதையும் போராட்டமாக மாற்றிய தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *