• July 24, 2025
  • NewsEditor
  • 0

பீகாரில் இன்னும் 4 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் `ஸ்பெஷல் இன்டன்சிவ் ரிவிஷன்’ (SIR) என்ற சிறப்புத் தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.

2003-ம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில், 1987-க்குப் பின்னர் பிறந்தவர்கள் தங்களது வீட்டுக்கு வரும் தேர்தல் அலுவலர்களிடம் ஆவணங்களைச் சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் தாங்கள் இடம் பெற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதில், பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 ஆவணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மோடி – தேர்தல் ஆணையம் – SIR

ஆனால், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டைகளை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் மறுத்திருப்பதுதான் பிரச்னை.

ஜூலை வரை மட்டுமே தேர்தல் ஆணையம் காலக்கெடு நிர்ணயித்திருப்பதால், “குறைந்த கால அவகாசத்தில் அவர்கள் எப்படி ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியும்?” என்று கேள்வியெழுப்பிவரும் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள், “பீகாரில் இந்தியா கூட்டணியின் வாக்குகளை வெட்டி போலி வாக்காளர்களின் பட்டியலைத் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது” என்று விமர்சித்து வருகின்றன.

நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் SIR விவகாரத்தைக் கடுமையாக எதிர்த்துவருகிறது.

இதில், ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை ஆவணங்களாகச் சேர்க்க வேண்டும் பரிந்துரைத்திருக்கும் உச்ச நீதிமன்றம், இது தொடர்பான வழக்கை ஜூலை 28-ம் தேதி மீண்டும் விசாரிக்க இருக்கிறது.

இத்தகைய சூழலில், பீகாரில் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.பி-யே தேர்தல் ஆணையத்தின் SIR வாக்காளர் திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்திருக்கிறார்.

நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி கிரிதாரி யாதவ், “தேர்தல் ஆணையத்துக்கு நடைமுறை அறிவு என்பதே இல்லை.

பீகாரின் வரலாறு அவர்களுக்குத் தெரியாது. அனைத்து ஆவணங்களையும் சேகரிக்க எனக்கு 10 நாள்கள் ஆனது.

என் மகன் அமெரிக்காவில் இருக்கிறார். ஒரு மாதத்தில் அவரால் எப்படி இதைச் செய்ய முடியும்?

இந்த நடவடிக்கை எங்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணிக்கு குறைந்தது 6 மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

கட்சி என்ன சொல்கிறது என்பது முக்கியமல்ல… நான் எனது தனிப்பட்ட கருத்தைத்தான் தெரிவிக்கிறேன்.

இதுதான் உண்மை. உண்மையைச் சொல்ல முடியவில்லையென்றால், பிறகு எதற்கு நான் ஏன் எம்.பி ஆனேன்?” என்று மிகவும் வெளிப்படையாகப் பேசினார்.

மேலும், கிரிதாரி யாதவ் நாடாளுமன்றத்துக்குள் பேசுகையில், “கடந்த 11 ஆண்டுகளில் பீகாருக்கு ஒரு புதிய ரயிலைக் கூட வழங்கவில்லை” என மத்தியில் 2014 முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசை விமர்சித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *