
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் கந்து வட்டிக்கு கடன் வாங்கிய ஏழை கூலி தொழிலாளிகளை குறிவைத்து தி.மு.க-வைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை பணம் கிடைக்கும் என்று பேரம் பேசி சிறுநீரகங்களை திருடியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, ஆனந்தன் தலைமறைவானார்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ஒருவர், பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுரி மருத்துவமனை, திருச்சியில் உள்ள சிதார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு இந்த சிறுநீரங்கள் பொருத்தப்பட்டதாக கூற, பரபரப்பானது.
இந்நிலையில், விதிமுறைகளை மீறி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடப்பதாக வெளியான இந்த செய்திகள் குறித்த விரிவான அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத்தை கடந்த 18 -ம் தேதி நியமித்ததாக தமிழ்நாடு அரசு விளக்கம் தந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து வினீத் தலைமையிலான அதிகாரிகள் குழு, புகார்கள் எழுந்த பகுதிகளில் விரிவான விசாரணை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது. இவ்விசாரணையின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை அறிக்கையினை வினீத், அரசுக்கு அனுப்பியுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், ‘பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி சிதார் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நலன் கருதியம், மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின்படியும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இந்த ஆணையை பிறப்பித்துள்ளதாகவும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
சிறுநீரகம் திருட்டு விவகாரத்தில் 2 தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ள தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.