
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக முச்சதம் அடித்த இந்திய வீரரான கருண் நாயர், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால், 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்தார்.
நடப்பு இங்கிலாந்து தொடரில் இதுவரை நடந்து முடிந்திருக்கும் 3 போட்டிகளிலும் கருண் நாயருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
ஆனால், வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாத கருண் நாயர் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே டக் அவுட் ஆனார்.
மொத்தமாக மூன்று போட்டிகளில் ஆறு இன்னிங்ஸையும் சேர்த்து 131 ரன்கள் மட்டுமே அடித்தார்.
இந்த மூன்று போட்டிகளிலும் அவரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் 40 தான். இத்தகைய சூழலில், மான்செஸ்டரில் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 23) தொடங்கியது.
இப்போட்டியில் வென்றால்தான் தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் கருண் நாயர் கழற்றிவிடப்பட்டு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், கேப்டன் சுப்மன் கில்லின் இத்தகைய முடிவை விமர்சித்திருக்கிறார்.
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கைஃப், “கருண் நாயரைத் தக்கவைக்கும் வாய்ப்பு கில்லுக்கு இன்று இருந்தது.
அவர் பின்தங்கியிருந்தாலும், இன்னும் ஒரு வாய்ப்புக்கு தகுதியானவர்தான். அவரை அணியில் தேர்வுசெய்திருக்க வேண்டும்.
இருப்பினும், அணியின் தலைவராக கடினமான முடிவுகளை எடுப்பதில் மரியாதை பெறும் வாய்ப்பை தவறிவிட்டார்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.