
திண்டுக்கல், மாம்பழ சாகுபடி அதிக அளவில் நடைபெறும் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. குறிப்பாக நத்தம், கோபால்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மாமரங்கள் பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் விளையும் பங்கனபள்ளி, காலப்பாடி, செந்தூரம், இமாம் பசந்த், மல்கோவா உள்ளிட்ட பல்வேறு ரக மாம்பழங்கள் வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக மாம்பழத்தின் கொள்முதல் குறைவாகவே உள்ளது. இந்த மாம்பழ சீசனில் விவசாயிகள் வேதனை அடையும் அளவிற்கு மாம்பழங்களின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மாமரத்திற்கு தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்து, கூலியாட்கள் சம்பளம், வேலையாட்கள் பற்றாக்குறை, இடுபொருட்கள் விலை உயர்வு என பராமரிப்பு செலவு பல மடங்கு கூடியுள்ளது.
ஆனால் அதற்கேற்ப மாம்பழங்களின் விலை உயரவில்லை… இதுவரை இல்லாத வகையில் இந்த வருடம் மாம்பழ சீசன் மார்ச் மாதமே தொடங்கியது. ஆனால் மாம்பழங்களின் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது. ஒரு கிலோ மாம்பழம் 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற்பனையானதால் பல ஏக்கரில் விளைவிக்கப்பட்ட டன் கணக்கிலான மாம்பழங்களை பறிக்காமல் மரங்களிலேயே விட்டு விட்டனர். இனி வரும் காலத்திலும் இதே நிலை தொடரும் என்ற அச்சத்தால் நத்தம், சாணார்பட்டி மற்றும் கோபால்பட்டி பகுதிகளில் மாம்பழ சாகுபடியை குறைத்து மாற்று விவசாயத்திற்கு செல்லும் நிலைக்கு மாறி வருகின்றனர்.

இதனால் நத்தம், கோபால்பட்டி சுற்று வட்டாரத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து வந்த மாமரங்களை எந்திரங்கள் மூலம் வெட்டும் பணிகளை செய்து வருகின்றனர். தாங்கள் ஆசையாய் வளர்த்த மாமரங்களை வெட்டும் கொடுமையான நிலைக்கு தள்ளப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். விவசாயிகள் மாமரங்களை வெட்டும் நிகழ்வால் இந்த பகுதியே சோகத்தில் உள்ளது.