
ஃபிளிப்கார்ட் ஆதரவு பெற்ற மின்வணிக தளமான மிந்த்ரா, பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவின் பிரபல ஆன்லைன் ஃபேஷன் விற்பனை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மிந்த்ரா நிறுவனம் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) விதிகளை மீறி, பல பிராண்டுகளின் சில்லறை வணிகத்தை (மல்டி-பிராண்ட் ரீடெயில்) சட்டவிரோதமாக நடத்தியதாக அமலாக்க இயக்குநரகம் (ED) குற்றம் சாட்டியுள்ளது.
மிந்த்ரா நிறுவனம், இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டு விதிகளை மீறி, தனது தளத்தில் பல பிராண்டுகளின் தயாரிப்புகளை விற்பனை செய்து, சட்டவிரோதமாக ரூ.1,654.35 கோடி மதிப்பில் லாபம் ஈட்டியதாக மிந்த்ரா மற்றும் அதன் இயக்குநர்கள் மீது அமலாக்க இயக்குநரகம் (ED) வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் FDI கொள்கைப்படி, மல்டி-பிராண்ட் சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலீடு குறித்து கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் மிந்த்ரா இந்த விதிகளை பின்பற்றவில்லை என்று ED தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து ED ஆய்வு செய்து வருகிறது. மேலும், நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வணிக மாதிரி குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய குற்றச்சாட்டுகள்
மிந்த்ரா, வெளிநாட்டு முதலீட்டு கொள்கையில் (FDI) தடை செய்யப்பட்ட பல பிராண்டு சில்லறை விற்பனையை (MBRT) மேற்கொள்ள மொத்த விற்பனை வழியை தவறாக பயன்படுத்தியுள்ளது. மொத்த விற்பனைக்காக என்று கூறி வெளிநாட்டு முதலீட்டைப் பெற்று, அதை தொடர்புடைய நிறுவனமான வெக்டர் இ-காமர்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ததாக ED கண்டறிந்துள்ளது.