• July 23, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

அது ஒரு மழை நாள். நீலமும் வெள்ளையுமாய் உடை உடுத்தி சலித்து விட்டதாலோ என்னவோ அன்று வானப் பெண் சாம்பல் நிறத்திற்கு மாறி இருந்தாள் . இரவின் உறக்கத்திற்கு ஒத்திகை பார்ப்பது போல் ஊர் அடங்கிய ஒரு சோம்பலான ஞாயிற்றுக்கிழமையின் மதியம் .

இரண்டு நாட்களாய் கொட்டித் தீர்த்த மழை , ‘பிழைத்துப் போங்கள்’ என்று மனிதர்களை மன்னித்து  இடைவெளி கொடுத்திருந்தது . மழை கழுவிய அவளது வீட்டு மரங்கள் எல்லாம் மரகதப் பச்சையில் தலை ஆட்டிச் சிரித்துக் கொண்டிருந்தன . யாரோ வீசிய  உணவின் மிச்சத்தில் தன் உயிர் வளர்த்துக் கொண்டிருந்த தெரு நாய் ஒன்று தன் குட்டிகளுடன் பொய்யாய்க் கடித்து விளையாடிக் கொண்டிருந்தது .

தூசி கழுவப்பட்ட தார் சாலைகள் அவசர நீர்க்குட்டைகளின் நடுவில் தம் முகம் காட்டி மகிழ்ந்தன .. இதமான தென்றல் அவளது முகம் வருடி , தலை கோதி தன் நேசம் சொல்லியது .. வீடு பால்கனியில் அமர்ந்திருந்தவள்  , சோகமா சுகமா என்று பிரித்தறிய முடியாத படியான மனநிலையில் இலக்கின்றி வெறித்து கொண்டு இருந்தாள்.. மழை வெறித்த பொழுதில் பறவையின் பார்வை போல உலகத்தை பார்த்து ரசிப்பதும் ஒரு சுகம் தான்..

“ஏய் ..பார்த்து வா ..வழுக்கப்  போகுது “..யாரோ யாரையோ கவனப்படுத்தும் ஒலியில் கலைந்தவள்  கீழே பார்த்தாள். இருபதுகளில் இருந்த ஒரு ஜோடி அவள் வீடு இருந்த பகுதியை கடந்து கொண்டிருந்தார்கள் .

“அதெல்லாம் வழுக்காது .. நீ பேசாம வா ..”

“குட்டிம்மா ..விளையாடாதே..சொன்னா கேக்கணும்..கவனமா வா..” மெதுவாய் அவர்களது குரல் தேய்ந்து மறைந்தது ..

குட்டிம்மா..இந்த ஒரு வார்த்தை  அவளை புரட்டிப்போட போதுமானதாய் இருந்தது .தொலைவில் போய்க் கொண்டிருந்த அவர்களைத் திரும்பிப் பார்த்தாள் ..அந்தப் பெண் தன் விளையாட்டைக் கை விட்டு அவன் கை பற்றி நடந்து கொண்டிருந்தாள் .

“குட்டிம்மா..சொன்னா கேளு “

“குட்டிம்மா ..சாப்பிட்டியா ..”

“இன்னும் தூங்கலியா குட்டிம்மா நீ ..”

“குட்டிம்மா ..போன காரியம்  நல்லபடியா முடிஞ்சது..”

அவனது குட்டிம்மாவாக வாழ்ந்த காலம் தான் எத்தனை இனிமையாக இருந்தது.. அன்று புரியவில்லை .. அத்தனையும் தொலைந்து போன வெறுமை நிரம்பிய ‘இன்று’ பூதாகரமாய் மிரட்டுகிறது .

எது அவர்களை பிரித்தது ? அவளது சிறு பிள்ளைத் தனமான கோபங்களா .. ஆக்டோபஸ்ஸின் கரங்களாய் அவனை ஆக்ரமித்துக் கொண்ட அவனது கடமைகளா ..அவனை மட்டுமே வேண்டிய அவளது அதீத காதலா.. ஆரம்ப காலங்களில்  அவளது முகத்தில் உறைந்திருக்கும் புன்னகைக்கு காரணமாய் அமைந்த உரையாடல்கள் பின் வந்த காலங்களில் தொலைந்தே போயின .

“எப்போ பார்த்தாலும் சண்டை போடற ..இல்லனா கேள்வியா கேக்கற..” ஒருநாள் சலிப்பான குரலில் அவன் சொல்ல பொங்கி அழுதாள் .

“உனக்கு எப்போதுமே நான் னா ஒரு இளக்காரம் தான் ..இவ தானேனு ஒரு அலட்சியம் ..”

“எனக்கு வேற எந்த வேலையும் இல்லையா ..கற்பனையிலேயே வாழனும் னு நினைக்காதே ..யதார்த்தத்தை புரிஞ்சிக்கோ.. “

“யதார்த்தம்னு நீ என்ன செஞ்சாலும் சரி னு ஆகுமா..என் பக்க நியாயத்தையும் கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணு ..”

அர்த்தமில்லா கோபங்கள்.. தேவையற்ற உரையாடல்கள் .. ஆழமான காயங்கள் ..

எது எங்கே மாறியது ? எது அவர்கள் வாழ்வை  மாற்றியது ? 

மணிக்கணக்கில் நீண்ட உரையாடல்கள்,  நிமிஷங்களாக மாறி இன்று நொடிகளில் சுருங்கி நிற்கிறது .

வீட்டினுள் வந்தவள் அலமாரியில் மேல் தட்டில் இருந்த பெட்டியை எடுத்தாள் .அது அவளது புதையல் .. அழுந்தப் பற்றினால் வலிக்குமோ எனும்படி மிருதுவாக வருடிப் பார்த்தாள் .அவளது சிறுவயதில் இருந்தே அவளோடு பயணிக்கும் நினைவுப் பெட்டகம் அது .மெதுவாய்த் திறந்தாள் ..அவனோடான நினைவுகளின் மொத்த குவியலும் அங்கே பாதுகாக்கப் பட்டிருந்தது . நினைவுகள் மதகு உடைத்த வெள்ளமாய் முட்டி மோதி வழிந்தன .. அவனோடான முதல் சந்திப்பில் தொடங்கி இன்று வரையிலான மொத்த வாழ்வும் கண்முன்னே படமாய் ஓடியது .

அதோ அது..அவனுடன் கை கோர்த்து முதல் முறை கோவிலுக்குச் சென்ற போது கிடைத்த திருநீர் குங்கும பொட்டலங்கள் ..

இது ..அவன் முதல் முதலாக வாங்கித் தந்த பூ ..காய்ந்து போன பிறகும் தூக்கி எரிய மனமற்று பத்திரமாய் பாதுகாத்து வைத்திருந்தாள்.

 இது முதல் முறையாக அவன் பரிசளித்த சேலை .அது .. இருவரும் சேர்ந்து முதல் முறை ஹோட்டல் சென்ற பில்..

இது அவளை சிரிக்க வைக்க அவன் எழுதிய கோமாளித்தனமான கடிதம் ..

இது அவளது ஆசைக்காக அவனால் எழுதப்பட்ட காதல்  கவிதை..

இப்படி பல “முதல் முறை”களை சேர்த்து பார்க்கும்போது கண்ணீர் கண்களை மறைத்தது.

கடைசியில் மகா பத்திரமாக அவள் பாதுகாத்து வைத்த ஒன்று கையில் கிடைத்தது.. அது திருமண நாளில் அவன் அணிவித்த மஞ்சள் கயிறு .. தாலி மாற்றி தங்கத்தில் கோர்த்த போது கோவில் உண்டியலில் போட சொன்னார்கள். அத்தனை பேர் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு பத்திரப்படுத்தி இருந்தாள் ..

அவன் காதல் சொன்ன நாள் வரி மாறாமல் நினைவில் ஆடியது ..

“உன்னை உடனே பார்க்கணும் ..இன்னிக்கி சாயந்திரம் எப்போதும் வெயிட் பண்ணற இடத்துக்கு வந்துரு ..”அவள் குரலில் இருந்த கோபம் அவனைப் பேச விடாமல் தடுத்தது.

அவளை சந்தித்தவன் அவளது முக வாட்டத்தைக் கண்டு ,”என்னடா ..ஏன் ஒரு மாதிரி இருக்கற ..என்னாச்சுடா? ” என விசாரித்தான் .

அவனை நிமிர்ந்து பார்த்தவளது முகத்தில் கலக்கத்தைக் கண்டவன் , “என்னம்மா ..எதுவானாலும் பார்த்துக்கலாம்..என்கிட்டே சொல்றதுக்கு என்ன ? சொல்லு..” என்றான் .

“அந்த முகேஷ் இல்ல..அவனை கல்யாணம் பண்ணிக்க வீட்டுல கேக்கறாங்க..”என்றாள் .

ஒரு வினாடி முகம் இருண்டவன் ,உணர்ச்சி துடைத்த குரலில் “நீ என்ன சொன்ன ” என்றான் .

“கோபத்தில் முகம் சிவந்தவள் , “பைத்தியமா நீ ..அவனை போயி யாரவது கல்யாணம் பண்ணுவாங்களா ??அவனும் அவன் குணமும் …என்னோட கோபமெல்லாம்  கொஞ்சம் கூட என்னைப்பத்தி யோசிக்காம எப்படி இப்படி கேப்பாங்கனு தான் ..என்னைப் பார்த்தா எப்படி இருக்கு இவங்களுக்கெல்லாம்??” என்று பொரிந்தாள் .

இது ரீதியில் இன்னும் ஏதேதோ பேசியவன், அவனிடம் அசைவே இல்லாததை உணர்ந்து, “என்னடா..பதிலே வரல?” என்றாள்..

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா குட்டிம்மா ???”..முதல் முறை அவளைக் குட்டிம்மா என்று அழைத்து அன்று தான் .இப்போது திகைப்பில் விழி விரிப்பது அவளது முறையானது .

“நான் நிஜமாத்தான் சொல்லறேன்..உனக்கு என்னய பிடிச்சிருக்கா? உன்னோட விருப்பம் இதுல ரொம்ப முக்கியம் ..உனக்கு ஓகே னா சொல்லு.. நானே உங்க வீட்டுல பேசறேன் ..”

கேட்பதையும் கேட்டு விட்டு இயல்பாய் அவள் முகம் பார்த்தான் .இதுதான் அவன் ..எதனை பெரிய விஷயம் என்றாலும் மிகவும் அமைதியாகவே எதிர்கொள்வான்.அவள் என்றுமே அவனிடம் பார்த்து வியக்கும் ஒரு விஷயம் இது. இப்போதும் தன் இயல்பின்படி  அமைதியாகவே அவளை எதிர்கொண்டான்.

விழி விரிய  ஒரு வினாடி அவனைப் பார்த்தவள் பொது இடம் என்றும் இல்லாமல் கண்களில் நீருடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் . . “இப்போ தான் கேட்கணும்னு உனக்கு தோணுச்சா..” கண்களில் கண்ணீரும் முகத்தில் வெட்கச் சிரிப்புமாக அவள் முறைக்க ,

“பயமா இருந்துச்சு ..அதான்..” என்று சிரித்தான். சிரிப்பின் இடையிலும் “நிஜமாகவே உனக்கு ஓகே தானே?? எனக்காக சொல்றியா??”  என்று கேட்டான் .

“இந்த விஷயத்துல எல்லாம் விளையாடுவாங்களா?.. நினைப்பு தான் உனக்கு”  அவன் தோளில் தலை மோதி சிரித்தாள் . உடன் சேர்ந்து சிரித்தவன் , அவளை விலக்கி நிறுத்தி ஆழமாக பார்த்தான்.

 ஒவ்வொரு முறையும் அவன் முகம் பார்த்து பேசுபவள் இன்று ஏனோ அவன் முகம் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள். சூழ்ந்திருந்த இருள் அவளது முகச் சிவப்பை மறைத்துக் கொண்டது .

ஆனாலும் அதை உணர்ந்து கொண்டவன் , “என் குட்டிம்மா ” என்று அவளோடு கைகளை கோர்த்துக் கொண்டான். “பக்கத்தில் இருக்கிற கோவிலுக்கு போவோமா?”, ஆசையாய் அவள் கேட்க , “உத்தரவு மேடம்!!” என்று சிரித்தான். பற்றி இருந்த கைகளில் இருந்த குளிர் அவன் மனதின் படபடப்பைச் சொன்னது.

 “எவ்வளவு நாளா இது மனசுக்குள்ள ஓடுது ?? ம் ??” அவள் மிரட்டலாக கேட்க ,

“அது ரொம்ப நாளா.. சொன்னா எங்க கோபப்பட்டு போயிடுவியா என்று பயமா இருந்தது ..அதனால தான்…”என்றான்.

“உன்னை விட்டுட்டு நான் எங்க போவேன் ..என்னை புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தானா” என்றவளிடம்,

“என் நிலைமையில் இருந்து பார்!! அப்போ புரியும் என் பயம் .உன் முடிவு எதுவாக இருந்தாலும் உன்னோட நட்பு எனக்கு ரொம்ப முக்கியம் குட்டிம்மா” என்றான். அன்றிலிருந்து இன்று வரை அவள் அவனுக்கு குட்டிம்மா தான்.

அவர்களது காதல் ஜெயித்தது போல் கல்யாணம் எளிதாக இல்லை. இரு வீட்டிலும் பலத்தை எதிர்ப்பு. எப்படியோ  இரு வீட்டார் சம்மதத்தையும் பெற்று அவர்கள் அவர்களது கல்யாணம் முடிந்தது. அன்றிலிருந்து இன்று வரை அவன் அவளது நல்ல நண்பன். சந்தோஷமோ துக்கமோ அவள் பகிர்ந்து கொள்ள தேடுவது அவனைத்தான்! அவனை மட்டும் தான்.

அவளது உலகமே அவன் தான் என்று ஆகி போனாள் . எத்தனை பெரிய பாரம் என்றாலும் அவனுடன் கைகளை கோர்த்துக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொள்வாள்.  எதுவும் கேட்காமல் தலைகோதுவான். சிறிது நேரத்தில் மனம் இலவம் பஞ்சாக மாறுவதை உணர்வாள்.  அதுதான் அவன்.. வார்த்தைகளின்றி  மௌனத்தில் பேசுபவன்.

எல்லா தம்பதிகளை போலவும் இயல்பாக ஆரம்பித்த வாழ்க்கை சிறு சிறு ஊடல்களும் அதன் பின்வரும் கூடல்களுமாக ஆனந்தமாய் நகர்ந்தது .அவர்களது எதிர்காலத்தின் பொருட்டு அவன் அதிகமாக உழைக்க ஆரம்பித்தான். அதனால் வரும் சோர்வு இயல்பாய் தலை தூக்கும் எரிச்சல் இவையெல்லாம் அவளுக்கு மிகப் பெரியதாகப்பட்டது. ஊடல்களின் எண்ணிக்கை அதிகமாக ஆக ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இயல்பாய் சமாதானம் ஆகும் பிரச்சனைகள் இப்போது பூதாகரமாய் மிரட்ட ஆரம்பித்தன.

“எப்ப பார்த்தாலும், ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் மனசுக்குள்ள போட்டு யோசிச்சுக்கிட்டே இருக்காத. இயல்பாக கடந்து போக பழகு “அவளது எதிர்பார்ப்புகளும்  அவனது சித்தாந்தங்களும் அங்கங்கே முட்டிக்கொள்ள ஆரம்பித்தன .

“பேசி பேசி சண்டை போட்டுக்கிட்டே இருக்கிறது விட கொஞ்ச நாள் நாம பேசிக்கவே வேண்டாம்.” ஒரு நாள் ஏதோ ஒரு பிரச்சனையின் போது அவன் சொல்ல அது அவளுக்கு மிகப்பெரிய அவமானமாகப்பட்டது. 

“அப்போ என் கூட பேசுறது கூட உனக்கு கஷ்டமா இருக்குது இல்ல??” என்று கோபித்துக் கொண்டவள் அவனுடன் பேசுவதை அடியோடு நிறுத்தி விட்டாள். ஏதேனும் தேவை என்றால் ,அவனிடம்  மிக அவசியமாக சொல்ல வேண்டும் என்றால் யாரிடமோ சொல்வது போல் சுவரைப் பார்த்துக் கொண்டு பேசுவாள் .

அவர்களது அறையாக இருந்தது இப்போது அவளது அறையாக மாறியது . அவன் பக்கத்தில் இருந்த அறையில் உறங்க ஆரம்பித்தான் இயல்பாக இருக்கும் பேச்சு வார்த்தைகள் கூட குறைந்து வார்த்தைகள் அற்ற மௌனங்கள் அவர்களை சூழ ஆரம்பித்தது.

அவன் அருகில் இல்லாத தனிமையில் அமர்ந்து யோசித்துப் பார்த்தவளுக்கு அதீத எதிர்பார்ப்புகளாலும் தேவையற்ற சிந்தனைகளாலும் அவர்களது வாழ்வையே அவள் நரகமாக்கிக் கொண்டிருப்பதாகப்பட்டது.

அவன் நண்பனாக இருந்த போது அவளால் ஏற்றுக்கொள்ள முடிந்த அவனது குணங்கள் இப்போது அவனே கணவன் என்றான போது அவன் மீதான அதீத எதிர்பார்ப்புகளால் தவறாகப்பட்டன.  இதில் அவளது தவறு ,அவனது தவறு என்று  சொல்வதற்கு எதுவும் இல்லை .அவன் வாழ்க்கையை எதார்த்தமாக அணுகுகிறான் . அவள் காதலைக் கொண்டு அணுகுகிறாள் .இதில் மாற்றிக் கொள்ள வேண்டியது யார் ??

கண்களில் கண்ணீர் பொங்க யோசித்துப் பார்த்தவளுக்கு அவனை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது.  இதே போன்று ஒரு மழை நாளில் இதே பால்கனியில் அவனுடன் கைகளை கோர்த்துக்கொண்டு அவன் தோள் சாய்ந்து மழையை ரசித்தது நினைவுக்கு வந்து இம்சித்தது.

காதல் என்பது தன் இணையின் இயல்புகளை அப்படியே ஏற்றுக் கொள்வதில் தானே இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. 

வெளியே மழை ஓய்ந்த வானம் மேலும் வெளிச்சமாய் விரிந்திருந்தது . அவளது மனதுக்குள்ளும் அதன் சிதறல்கள்.

அவளது காதலை, அவளது எதிர்பார்ப்புகளை , அவளது ஆசைகளை காலம் அவனுக்கும் புரிய வைக்கும். அதுவரை காத்திருப்பதில் தவறென்ன இருக்கிறது. எந்த சூழலிலும் அவனை இழப்பதென்பது அவளால் இயலாது. அதை விட மரணம் எளிதெனப்பட்டது. அது அவனுக்கு நிம்மதியை கொடுக்குமா? அதற்கா அவனைக் காதலித்தாள் ? காத்திருப்பதும் காதல் தானே? 

வாசலில் அவனது வருகையை உணர்த்தும் ஒலி கேட்டது .வாசலுக்கு ஓடி வந்தவள் பல நாட்களுக்குப் பின் கண்களில் கண்ணீருடன் பாய்ந்து அவன் நெஞ்சில் புதைந்து கொண்டாள் .

“சாரிம்மா ..உன்னை நிறைய கஷ்ட படுத்திட்டேன் ல .. தொட்டத்துக்கு எல்லாம் சண்டை போட்டு ரொம்பவே கஷ்ட படுத்திட்டேன்ல ..”

விம்மல்களுக்கு இடையில் முகமெங்கும் முத்தமிட்டாள் ..அவளது திடீர் மாற்றத்தின் காரணம் அறியாமல் விழித்தவன் அவளது கண்ணீர் கண்டு இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் .

“என்ன ஆச்சு குட்டிம்மா..ஏன் இந்த அழுகை ? எதுவானாலும் சரி ஆயிரும்..அழ  கூடாது ” அவளைத் தன்னுடன் அணைத்துக் கொண்டான் .

அவனது அழைப்பில் அவளுக்குள்அலைபாய்ந்த எண்ணங்கள் சமனப்பட்டதை உணர்ந்தாள்.அவள் என்றும் அவனது குட்டிம்மா தான் .

 Selva Kiruthika Gowrinathan

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *