
சென்னை கொளத்தூர் காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் பாண்டியராஜன். அண்மையில் திருமலா பால் நிறுவனம் ஊழியர் தற்கொலை வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டில் பாண்டியராஜன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
அவர் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை என்று பணியாற்றிய பெரும்பாலான பகுதிகளில் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக்கு எதிராக போராடிய பெண்ணை கன்னத்தில் அறைந்தது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டது என்று பாண்டியராஜனின் சர்ச்சை பட்டியல் மிகவும் நீளமானது.
பாண்டியராஜன் ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார். பணியில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட பயணங்களிலும் சர்ச்சையில் சிக்க தொடங்கியுள்ளார். பாண்டியராஜன் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் சென்றுள்ளார்.

இரவு நடை சாத்தப்பட்ட நிலையில், ஆகம விதிகளை மீறி பாண்டியராஜனுக்கு விஐபி தரிசனம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பக்தர்கள் எடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பக்தர்கள் பாண்டியராஜன் மற்றும் கோயில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
“முதலமைச்சராக இருந்தாலும் ஆகம விதிகளை மீறக் கூடாது. உங்களுக்கு உள்ளே செல்ல யார் அனுமதி கொடுத்தனர்.” என்று பக்தர் ஒருவர் பாண்டியராஜனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பாண்டியராஜன் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “உங்கள் வேலையை பாருங்கள்.” என்று மட்டும் கூறினார்.

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாண்டியராஜன் மற்றும் அவருக்கு விஐபி தரிசனத்துக்கு அனுமதி வழங்கிய பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.