
லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் (ஜூலை 21) அனுமதிக்கப்பட்டார்.
மூன்று நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் முதல்வரின் உடல்நலம் குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். “முதல்வர் நன்றாக இருக்கிறார். உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு ஒருநாள் முன்னாடி, அவர் உயிராக மதித்த சகோதரர் மு.க முத்துவின் இறுதிசடங்கில் ஒரு நாள் முழுவதும் இருந்தார்.
காலையில் இருந்து சாப்பிடாமல் இருந்தார். மறுநாள் ஒன்றரை கிலோ மீட்டர் முதல்வர் நடந்து முடித்த பிறகு, தலைசுற்றல் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நேற்றும், நேற்று முன்தினமும் பரிசோதனைகள் முடித்து இருக்கிறார்கள்.இன்றைக்கு மருத்துவமனையில் ரிப்போர்ட் கொடுப்பார்கள். சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் இன்று கூறுவார்கள்” என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.