• July 23, 2025
  • NewsEditor
  • 0

‘புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடாதீர்கள்’ என்ற வாசகத்தை உயிர்பிக்கும் சம்பவம் ஒன்று ஹைதராபாத்தில் நடந்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் இன்ஃப்லியன்ஸர் அபினவ் மயிலவரபு ஹைதராபாத்தில் வீட்டுக்குச் செல்ல ஆட்டோவை வாடகைக்கு எடுத்திருக்கிறார். செல்லும் வழியில் ஆட்டோ டிரைவரிடம் பேச்சுக்கொடுக்கிறார். அப்போது ஆட்டோ டிரைவர் ‘COMPUTER’ என்ற வார்த்தைக்கு புல் பார்ம் என்ன? இதற்கு பதிலளித்தால் இந்த சவாரிக்கு காசுத் தரத் தேவையில்லை” எனக் கேட்கிறார்.

ஆட்டோ டிரைவர்

அபினவ் சிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘தெரியவில்லையே’ என பதிலளிக்கிறார். உடனே ஆட்டோ டிரைவர், “Commonly Operated Machine Purposely Used for Trade, Education and Research இதுதான் COMPUTER என்ற வார்த்தையின் முழு வடிவம். கல்விதான் சம்பாதிக்க வைக்கும். சம்பாதித்தல் உங்களுக்கு எதையும் கற்றுத் தராது. ஆங்கிலம், Political Science ஆகிய இரண்டு முதுகலை பட்டம் பெற்றவன். எனக்கு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது கனவு. அதற்காக தயாராகிக்கொண்டிருந்தேன். ஆனால் வாழ்க்கை எனக்கு வேறு திட்டங்களை வைத்திருந்தது.

திடீரென்று, என் குடும்பத்தார் எனக்கு திருமண ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகள் பிறந்தனர். என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. நான் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறேன். எனக்கு ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, உருது, தமிழ், மலையாளம் என ஏழு மொழிகள் தெரியும். என் முஸ்லிம் நண்பர்கள் நான் முஸ்லிம்களைப் போலவே சரளமாக உருது பேசுகிறேன் எனக் கூறுவார்கள். கார்ப்பரேட் வேலைகளை விட்டபோதும், நிறைவேற்ற முடியாத கனவுகள் இருந்த போதிலும் இப்போதும் நான் பார்க்கும் இந்த வேலையில் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறேன்.

கார்ப்ரேட் வேலையில் அதிக சம்பளம் கொடுப்பார்கள். ஆனால், அதற்காக உங்களை முழுமையாக உறிஞ்சி எடுத்து சக்கையாக்கிவிடுவார்கள்” என கடந்தக் காலம் முதல் நிகழ்கால சூழல் வரை அனைத்தையும் பேசி சிரிக்கிறார்.

இந்தக் காணொளியை சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த அபினவ், “வெறும் 15 நிமிடங்களில், ஏழு மொழிகள் தெரிந்த, இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்ற, ஒரு காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று இலக்கு வைத்திருந்த ஒருவரை சந்தித்தோம்… எந்தப் பாடப்புத்தகத்தையும் விட வாழ்க்கைத் தத்துவங்களைப் போகிற போக்கில் பகிர்ந்து கொண்ட ஒருவர்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *