
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பீகாரில் நடந்துவரும் சிறப்பு வாக்காளர் பெயர் திருத்தப் பட்டியலுக்கு எதிர்க்கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் கோஷங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் மழைக்கால கூட்டத்தொடரின் 2-ம் நாளான நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஸ்தம்பித்தது.
அதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பீகார் மாநிலத்தில் 52 இலட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. அதனால், இன்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இது நீக்கப்பட்ட அந்த 52 இலட்ச மக்களைப் பற்றியது மட்டுமல்ல. மகாராஷ்டிராவிலும் (சட்டமன்றத் தேர்தல்) மோசடி செய்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலைக் கொடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டோம், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். வீடியோகிராஃபியைக் காட்டுமாறு கேட்டோம், வீடியோகிராஃபி விதிகளை மாற்றினார்கள். மகாராஷ்டிராவில் 1 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். கர்நாடகாவில், ஒரு பெரிய திருட்டை கண்டுபிடித்துள்ளோம்.

திருட்டு எப்படி நடக்கிறது என்பதை நான் தேர்தல் ஆணையத்திடம் தெளிவாகக் காண்பிப்பேன். அவர்களின் இந்த விளையாட்டு இப்போது எங்களுக்குத் தெரிந்துவிட்டது என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். அதனால் அவர்கள் வாக்காளர்களை நீக்கிவிட்டதால், புதிய வாக்காளர் பட்டியலை கொண்டு வருவார்கள்” என்றார்.