
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
திருச்சியின் நடுமையப் பகுதியில் அமைந்த கோட்டை வாசலால் மெயின்கார்ட்கேட் (Main Guard Gate) என்று அழைக்கப்பட்ட மெயின்கார்ட் கேட்டில் பிரபலமான ஒரு நபரைப் பற்றி இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அவன் பெயர் அப்துல்லா. அவர் எங்கிருந்து வந்தார், அவர் சொந்த ஊர் எது, சொந்த பெயர் எது என்று யாருக்கும் தெரியாது. உடம்பு முழுவதும் அழுக்கான துணி முடிச்சுகளை அணிந்து கொண்டு அந்த அரசமரம் தாண்டி சிறிது தொலைவில் இருக்கும் வேப்பமரத்தின் அருகில் சாலை ஓரம் அமர்ந்திருப்பார். அவர் அருகில் ஒரு டால்டா டின் இருக்கும். அந்த டால்டா டின்னில் தான் அவர் டீ குடிப்பான்.
யாரையும் அவர் தொந்தரவு செய்வது கிடையாது. குளிக்காமல் தூசியில் அமர்ந்தும் உறங்கியும் இருப்பதால் அவர் உடம்பும் தலை முடியும் தூசி படிந்து அழுக்காக காணப்படும். அப்பொழுது ஜாஃபர்சா தெரு அருகில் குடியிருந்த சில ஈரானியர்களும் பார்சிக்களும் சில சமயம் அப்துல்லா அருகில் அமர்ந்து ஏதோ பேசி செல்வார்கள்.
மற்ற அனைவரையும் பயமுறுத்தும் படி இருக்கும் அப்துல்லா அவர்களிடம் அமைதியாக பேசுவார் அல்லது அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பார். அவரிடம் பேசிவிட்டு அவர்கள் செல்லும் பொழுது ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் கொடுத்து செல்வர்.
அந்த ரூபாய் நோட்டுகளையும் சில்லறைகளையும் அவன் எங்கே சேமித்து வைப்பான் என்பது அனைவருக்கும் ஒரு புரியாத புதிராகவே கடைசிவரை இருந்தது.அவன் கைவிரல்களில் கற்கள் பதித்த மோதிரங்களும் இருக்கும்.
பிரிட்டோ காலனி பையன்கள் அவரை கடந்து செல்லும் பொழுது பயத்துடன் ஓடியே கடந்து செல்வர். அப்துல்லா அதை கண்டும் காணாதது போல் இருப்பான். காலனி பையன்கள் விடுமுறை நாட்களில் கூட்டு சேர்ந்து கொண்டு அவன் மேல் கல்லெறிந்து அவனை சீண்டுவர்.
அப்துல்லா பொறுமையாக இருப்பான். பொறுமை எல்லை கடக்கும் பொழுது எழுந்து அந்த சிறுவர்களை பிடிப்பது போல் துரத்தி வருவான். அவன் ஓடி வரும் பொழுது அவன் போட்டிருக்கும் துணி முடிச்சுகள் எல்லாம் ஆடும். ஆனால் நான் அறிந்தவரை அப்துல்லா யாரையும் பிடித்ததுமில்லை: அடித்ததுமில்லை.
அந்த முன்னால் குறிப்பிடப்பட்ட வேப்பமரத்தின் அருகில் பாய் கடை என்றழைக்கப்படும் பெட்டிக்கடை இருந்தது. திருச்சியில் அப்பொது இருந்த பெட்டிக்கடைகளில் அனேக கடைகள் இஸ்லாமியர்களாலேயே நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பிரிட்டோ காலனி வாசிகளுக்கு பாய் கடை என்றால் காலனி நுழைவு வாயிலை ஒட்டி அமைந்திருந்த பெட்டிக்கடையே ஆகும்.
இது தவிர்த்து அந்த காலத்தில் விஷேசமான கடலை மிட்டாய், தேன் மிட்டாய், கமர்கட்டு, இலந்தை உருண்டை போன்ற பலவித மிட்டாய்களும் ந்யூட்ரின் சாக்லெட்டுகளும் கிடைக்கும். அப்போது காட்பரிஸ் சாக்லெட்டுகளோ எக்ளேர்ஸ் போன்றவைகளோ சந்தைக்கு பரவலாக வராத நேரம். அதிகபட்சமாக பால்கோவா பாக்கெட் கிடைக்கும்.

இது தவிர்த்து அனைத்துவிதமான ஆங்கில மற்றும் தமிழ் செய்தித் தாள்களும் இக்கடையில் கிடைக்கும். மேலும் எல்லா வார பத்திரிக்கைகளும் பாய் கடையில் கிடைக்கும். அந்த காலகட்டத்தில் பிரபலமாகிக் கொண்டிருந்த இரும்புகை மாயாவி, லாரன்ஸ் மற்றும் டேவிட்டை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய முத்து காமிக்ஸ் புத்தகங்களும் எப்பொழுதுமே அந்த கடையில் கிடைக்கும்.
ஒரு ரூபாய் விலையில் கிடைத்த காமிக்ஸ் புத்தகங்கள் வாங்க முடியாதபொழுது பத்து பைசா வாடகை கொடுத்து இந்த புத்தகங்களை வாடகைக்கு வாங்குவோம். வாங்கி படித்துவிட்டு திரும்ப கடையிலேயே கொடுத்துவிடவேண்டும்.
இந்த பாய் கடையின் அருகில் எடை பார்க்கும் இயந்திரம் ஒன்று இருந்தது. அந்த இயந்திரத்தின் மேல் ஏறி நின்று ஒரு பத்து பைசா நாணயத்தை போட்டால் எடை குறிக்கப்பட்ட ஒரு அட்டை வந்து விழும். அந்த அட்டையில் யாராவது ஒரு நடிகர் அல்லது நடிகையின் படம் இருக்கும். அந்த அட்டையின் பின்னால் ஏதாவது ஒரு செய்தி இருக்கும்,” நண்பர்களால் கஷ்டம், பணத்தொல்லை “ என்பது போல்.
சாப்பாட்டு சமயத்தில் அனைவரும் தடுக்கு எனப்படும் சாப்பாட்டு பாய்கள் மேல் அமர்ந்து உணவு உண்போம். எங்கள் அப்பா மனை பலகையின் மேல் அமர்ந்து உணவு உண்பார். அதன் உள் அர்த்தம் எனக்கு இன்று வரை புரியவில்லை.
காலனி நுழைவு வாயிலில் இரண்டு பெரிய இரும்பு கேட்கள் இருக்கும். அந்த கேட்கள் எப்பொழுதும் திறந்தே இருக்கும். பகல் நேரங்களில் அவை மூடி நான் பார்த்ததே இல்லை.
காலனி வாயிலை அடுத்து தென்புறம் முன்னாளில் மைக்கிள்ஸ் ஐஸ்கிரீம் கடை –இப்போதைய பாங்க் ஆஃப் இந்தியா இருக்கும் கட்டிடத்தில் தான் – இருந்தது. வங்கிக்கு வாடகை விட்டபொழுது மைக்கிள்ஸ் ஐஸ்கிரீம் இப்பொழுது இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

மைக்கிள்ஸ் ஐஸ்கிரீம் கடை மாறியதில் எங்களுக்கு ஒரு ஆதாயமும் இருந்தது. ஐஸ்கிரீம் கடையின் பின்பக்க ஜன்னல் வழியாகவே நாங்கள் ஐஸ்கிரீம் வாங்கிக் கொள்வோம். அந்த கடையில் ஆறுமுகம், மணி என்ற இரு பையன்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் இருவரும் கடையிலேயே இரவு படுத்து உறங்குவர்.
எங்கள் வீட்டிற்கு ஐஸ்கிரீம் வாங்கும் பொழுது ஒரு ஸ்கூப்பிற்கு மேல் இன்னொரு ஸ்கூப் கிடைக்கும். முதலில் வெனிலா ஐஸ்கிரீமும் ஃப்ரூட் சாலட்டும் தான் மைக்கிள்சில் கிடைக்கும். இப்பொழுதோ சாக்லெட் போன்ற பல்வேறு வகையான ஐஸ்கிரீம்கள் சகாய விலையில் கிடைக்கின்றன.
ஐஸ்கிரீம் செய்ய தேவையான பால், காலனியில் ஒரு கொட்டகையில் காய்ச்சப்படும். இந்த கொட்டகை மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டு இருக்கும். முதல் பகுதியில் சோடாவிற்கும் கலர் குடிபானத்திற்கும் க்யாஸ் ஏற்றும் இயந்திரம் இருக்கும்.பெரிய மீசை வைத்துக்கொண்டிருக்கும் ராம்தாஸ் என்ற ஒருவர் பாட்டில்களில் நிரப்பப்பட்ட கலர் பானத்தில் க்யாஸ் ஏற்றுவார். நடு பகுதியில் தேவைப்படாத தட்டுமுட்டு சாமான்கள் நிரம்பி கிடக்கும்.
மூன்றாவது பகுதியில் இரண்டு அடுப்புகள் அமைந்திருக்கும், அதில் ஒரு அடுப்பில் தான் ஐஸ்கிரீமின் மூலப்பொருளான பால் காய்ச்சப்படும். இன்னொரு அடுப்பில் கலர் குடிபானம் தயாரிக்க தண்ணீரில் சர்க்கரை கலந்து காய்ச்சுவர்.
இந்த பால் இரவு முழுதும் காய்ச்சப்பட்டு பின்னர் சர்க்கரை கலந்து ருசியாக இருக்கும். இந்த காய்ச்சப்பட்ட பாலின் ஆடையை நாங்கள் திருட்டுத்தனமாக திருடி சாப்பிடுவோம். கடை சொந்தக்கார சகோதரர்களில் ஒருவரின் மனைவி எப்போதாவது ஒருமுறை வெண்ணெய் திரட்டுவார். அப்போது கிடைக்கும் கக்கம் என்று அழைக்கப்படும் கசடு எங்கள் வீட்டிற்கும் வரும். இனிப்பு கடைகள் வருவதற்கு முன் தயாரிக்கப்பட்ட இனிப்பு ஆதலால் அதை பகிர்ந்து கொள்ள அம்மாவிடம் மிகுந்த போட்டி இருக்கும்.
எங்கள் காலனிக்கு எதிரே தான் பிஷப் ஹீபர் பள்ளி அமைந்திருந்தது. அப்பள்ளியின் விளையாட்டு மைதானம் மிகப் பெரிதாக இருக்கும். இந்த விளையாட்டு மைதானத்தில் தான் பொருட்காட்சிகள் நடைபெறும். அரசியல் கட்சி கூட்டங்களும், விளையாட்டு போட்டிகளும், ஜெபக்கூட்டங்களும் பிஷப் ஹீபர் பள்ளி விளையாட்டு மைதானத்திலேயே நடைபெறும். எனக்கு தெரிந்து துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டுவிழா கூட ஒருமுறை இங்கு தான் நடைபெற்றது.

தாழ்ந்த பகுதியில் இருந்ததால் மழை காலங்களில் இந்த விளையாட்டு மைதானமே நீர் நிரம்பி ஒரு பெரிய ஏரி போல் காட்சி அளிக்கும். அந்த நீர் கடலில் நாங்கள் அலுத்துப் போகும் வரை விளையாடுவோம்.
இந்த விளையாட்டு மைதானத்தின் ஒரு மூலையில் ஒரு சிறிய குளம் உண்டு. அந்த குளத்திற்கு மங்கம்மா குளம் என்று பெயர். ராணி மங்கம்மா அந்த குளத்தில் தான் குளித்தாக சொல்லிக் கொள்வர்.
அந்த மைதானத்தின் கிழக்கில் இப்பொழுதும் சிறு சிறு செங்கற்களால் கட்டப்பட்ட சிதிலமடைந்திருக்கும் சுவரை காணலாம். இந்த சுவரில் ஏறி வந்தால் டவுன் ஹாலை அடைந்து விடலாம். இந்த டவுன் ஹால் பகுதியில் தான் ராணி மங்கம்மாவின் அரண்மனை இருந்துள்ளது.
அரண்மனை இருந்த ஒரு பகுதியில் ஸ்டேட் பான்க்கின் கிளையும் இன்னொரு பகுதியில் தாலுக்கா அலுவலகமும் மீதி பகுதியில் அருங்காட்சியகமும் அமைந்துள்ளது.
அரண்மனையின் இன்னொரு பாகத்தில் காவல் நிலையமும் ஜெயிலும் அமைந்துள்ளன. குதிரைகள் கட்டப்பட்டிருந்த லாயத்தில் பதிவாளர் அலுவலகம் தற்போது இயங்கி வருகிறது.
குதிரை என்றவுடன் என் ஞாபகத்துக்கு வருவது லூர்து மாதா கோவிலின் எதிரில் இருந்த குதிரை வண்டி ஸ்டாண்ட் தான். வரிசையாக ஐந்தாறு குதிரை வண்டிகள் அங்கே நின்றிருக்கும். அந்த குதிரை வண்டிகளை வாடகைக்கு எடுப்போர் மிக குறைவே. இருந்தாலும் அந்த குதிரை வண்டிகள் அங்கே கட்டாயம் நின்றபடி இருக்கும்.
அந்த குதிரை வண்டி ஸ்டாண்ட் அருகில் இருந்த இன்னொரு பாய் கடையில் சைக்கிள்கள் வாடகைக்கு விடப்படும். அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி எப்போதாவது பெறும் பத்து பைசா கொண்டு ஒரு மணி நேரத்துக்கு சிறுவர்கள் ஓட்டக்கூடிய சிறு சைக்கிள்களை வாடகைக்கு எடுப்போம்.
ஆட்டோக்கள் அறியப்படாத அந்த காலகட்டத்தில் சைக்கிள் ரிக்ஷாக்கள் வாடகைக்கு கிடைக்கும். எங்கள் காலனியில் இரவு நேரத்தில் இஞ்ஞாசி என்ற ஒரு சைக்கிள் ரிக்ஷாக்காரர் தன் ரிக்ஷாவை நிறுத்தி இருப்பார். இஞ்ஞாசி நல்ல மூடில் இருந்தால் அவர் ரிக்ஷாவை காலனி சிறுவர்களாகிய நாங்கள் சிறிது தூரம் ஓட்ட அனுமதிப்பார். ஆட்கள் இழுத்து செல்லும் ரிக்ஷாக்கள் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தாலும் பார்த்ததிலை.

அப்பொழுது தபால் மற்றும் தந்தி ஒரே துறையாக இயங்கி வந்தது. தந்தி மூலம் துக்க செய்திகளே அதிகம் அனுப்பப்பட்டன. வாழ்த்துச் செய்திகளும் தந்திகளின் மூலம் அனுப்பலாம். தந்திகள் அனுப்ப குறைந்த செலவே பிடித்தன.அதிக அளவில் தொலைபேசிகள் வீடுகளில் இருக்கவில்லை. வெளியூரில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளில் பேச வேண்டுமென்றால் தந்தி அலுவலகத்தில் இருந்து குறிப்பிட்ட வீடுகளுக்கு ஒரு தூதுவர் மூலம் அழைப்பு வரும். தொலைபேசிஅலுவலகம் சென்று சிறிது பொறுத்திருந்து தொலைபேசி அழைப்பு மீண்டும் வரும் பொழுது பேசிக் கொள்ளலாம்.
காலனியில் வளர்ந்த வளர்ப்பு பிராணிகள்
ஆவின் பால் மற்றும் தனியார் பால் விற்பனை மையங்கள் நிறுவாத காலம் அது. காலனியில் சில வீடுகளுக்கு ஒரு பால்காரர் சைக்கிளின் பின்னால் பால் டின்னை கட்டி வீடு வீடாக வந்து பால் ஊற்றுவார். மற்றும் சில வீடுகளுக்கு பால்கார கோனார்கள் மாட்டை ஓட்டிவந்து காலனியில் நிறுத்தி பால் கறந்து வீடுகளுக்கு கொடுத்துச் செல்வார்கள்.
ஆட்டுக்கறி கிலோ நாற்பது ரூபாய்க்கு விற்ற காலமது. மதுரை ரோடு என்று அழைக்கப்படும் சாலையில் தானன்றைய ராஜா தியேட்டர் அமைந்திருந்தது.
ராஜா தியேட்டர் செல்லும் வழியில் தான் கறிக்கடைகள் வரிசையாக அமைந்திருக்கும். காலனியில் இருந்து நடந்து அந்த கறிக்கடைகள் சென்று ஆட்டுக்கறி வாங்கி வருவோம். சில நேரங்களில் கறி அதிகம் தங்கி விட்டால் மட்டன் கடை பாய் வீட்டிற்கு வந்து அப்பாவை சந்திப்பார். மீதி கறியை சற்று தள்ளுபடி விலையில் வாங்கி மஞ்சள் தேய்த்து உப்பு போட்டு வெயிலில் காயவைத்து உப்புக்கண்டம் போட்டு வைத்துக் கொள்வோம். இது தான் எதிர்பாராமல் விருந்தாளிகள் வந்துவிடும் அவசர காலங்களில் அம்மாவுக்கு கைகொடுக்கும்.

எழுபதுகளில் ப்ராய்லர் கோழி கடைகள் கிடையாது. நாட்டுக்கோழிகளே அதிகம் கிடைக்கும். ஒரு வட்ட வடிவ மூங்கில் கூடையில் கோழிகள் அடைக்கப்பட்டு காலனி வீடுகளில் வந்துவிற்பர். எங்கள் அம்மா கறுப்பு நிற கோழிகளையும் சேவல் கோழிகளையும் பொதுவாக தேர்ந்தெடுக்க மாட்டார். கோழிகளை வாங்கி அவற்றின் ஒரு காலில் கயிறுகட்டி வீட்டினுள் ஒரு வாரம் கட்டிப் போடுவார்.
ஒரு வாரம் கழித்து கால் கயிற்றை அவிழ்த்து விட்டாலும் நாள் முழுதும் வெளியில் தீனி சாப்பிட செல்லும் கோழிகள் இரவு நேரங்களில் வீட்டிற்கு வந்துவிடும். சில கோழிகள் இரவில் வீட்டில் உள்ள சீத்தா மரக்கிளைகளில் அமர்ந்து இருக்கும். அப்படியே விட்டால் இரவில் பூனை அடித்து தின்னும் அபாயம் இருப்பதால் கோழிகளை இரவு கூடையில் போட்டு மூடவேண்டும். அதனால் மரக்கிளைகளில் அமர்ந்து இருக்கும் கோழிகளை இரவானதும் பிடித்து கூடையில் போட்டு மூடிவிடுவோம்.
கோழிகள் முட்டையிடும் பருவத்தில் அடித்தாலே நல்ல ருசியாய் இருக்கும். அவை சத்தமிடுவதை கண்டே அம்மா அறிந்து கொள்வார், கோழி முட்டையிடும் பருவம் அடைந்து விட்டதென. அந்த கோழியை முட்டை இடும் வரை கூடையில் போட்டு மூடி விடுவார். ஒரு கோழி சுமாராக எட்டு முதல் பத்து முட்டை இடும். அக்கோழி பொதுவாக நான்கைந்து முட்டைகள் இட்டவுடன் அதை அடித்து அம்மா மணக்க மணக்க குழம்பு செய்து விடுவார்.
எங்கள் காலனியில் தேவா வீட்டில் நாட்டு சேவல் வளர்ப்பார்கள். ஜெரால்ட் என்ற பையன் வீட்டில் போந்தா ரக கோழி வகையில் சேவல் ஒன்றை வளர்ப்பார்கள். சமயங்களில், இந்த இரண்டு சேவல்களுக்கும் சண்டை மூண்டு விடும். நாட்டு கோழி தான் ஜெயிக்கும். வெள்ளை வெளேர் என்று இருக்கும் போந்தா கோழியும் விடாது. கடைசி வரை போராடும். இரண்டு சேவல்களுக்கும் ரத்தம் சிந்தும். ஆனால் ஒவ்வொரு முறையும் தோற்பது போந்தா சேவலே. நாங்கள் சேவல் சண்டையை பார்த்து ரசிப்போம். யாராவது பெரியவர்கள் வந்து இந்த சேவல் சண்டையை நிறுத்தி இரண்டு சேவலையும் பிரித்து விடும் வரை இந்த சேவல் சண்டை நடந்து கொண்டே இருக்கும். அச்சேவல்கள் பிரித்து விட்ட பின் ரத்த காயங்களில் மஞ்சள் தூள் பூசுவார்கள்.
தொடரும்..
அன்புடன்
எஃப்.எம்.பொனவெஞ்சர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.