
இந்தியாவில் கடந்த 2024-ம் ஆண்டில் மட்டுமே 22,845.73 கோடி ரூபாய் சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டிருக்கிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
இந்த முந்தைய 2023-ம் ஆண்டில் ஏற்பட்ட 7,465.18 கோடி ரூபாய் இழப்புடன் ஒப்பிடுகையில் இது 206% அதிகம்.
மக்களவையில் எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் பண்டிட் சஞ்சய் குமார், இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தால் (I4C) இயக்கப்படும் தேசிய சைபர் க்ரைம் ரிப்போர்டிங் போர்டல் (NCRP) மற்றும் சிட்டிசன் நிதி சைபர் மோசடி அறிக்கையிடல் மற்றும் மேலாண்மை அமைப்பு (citizen fund crime fraud reporting and management system – CFCFRMS) அறிக்கையைச் சுட்டிக்காட்டினார்.
இந்த இரண்டு அமைப்புகளில் மட்டும் 2024-ல் 36.37 லட்சம் நிதி மோசடி சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. 2023-ல் இது 24.42 லட்சம் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
CFCFRMS அமைப்பு கடந்த 2021-ம் ஆண்டு மோசடிகளால் பாதிக்கப்படும் நபர்கள் உடனுக்குடனாக புகார் பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் அதிகாரிகள் எளிதில் குற்றவாளிகளை பிடிக்கவும் இழந்த நிதியை மீட்கவும் ஒரு வாய்ப்பை வங்கியது.
CFCFRMS மூலம் இதுவரையில் 17.82 லட்சம் வழக்குகளில் 5,489 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
தீவிர நடவடிக்கைகள் மூலம் சைபர் குற்றங்களில் தொடர்புடைய 9.42 லட்சம் சிம் கார்டுகளையும் 2.63 லட்சம் IMEI எண்களையும் முடக்கியுள்ளனர்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் விதமாக 2024-ல் ஒரு சந்தேகப் பதிவேட்டை உருவாக்கத் தொடங்கியுள்ளனர். இதில் 11 லட்சத்துக்கும் அதிகமான சந்தேகத்துக்குரிய அடையாளங்களை பதிந்து, 24 லட்சத்துக்கும் அதிகமான மியூல் கணக்குகளை (போலி கணக்குகள்) கண்டறிந்து, 4,631 கோடி ரூபாய் மோசடியை தடுத்ததாகக் கூறியுள்ளனர்.
மேலும் இணையமைச்சர் சஞ்சய் குமார், பிரதிபிம்ப் என்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கருவியைப் பற்றியும் அது எப்படி சைபர் கிரிமினல்களின் நெட்வொர்க்கை கண்டறியவும் அவர்களது உள்கட்டமைப்பை உடைக்கவும் பயன்படுகிறது என்பதையும் கூறியுள்ளார்.

அந்தக் கருவி மூலம் இதுவரை 10,599 கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 26,096 இணைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன, 63,019 உதவிக் கோரிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சைபர் குற்றங்களில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது, கைது நடவடிக்கை மேற்கொள்வது, குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பது உள்ளிட்ட பிற விவகாரங்கள் மாநில/யூனியன் பிரதேச காவல்துறையின் பொறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.