
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலுள்ள குப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மகன் பாரத் (36). கேட்டரிங் படித்துள்ள பாரத் தாம்பரம் பகுதியிலிருக்கும் ஒரு தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலைப் பார்த்து வந்தார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த நந்தினி (26) என்பவருடன் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. 4 மற்றும் 3 வயதில் இருப் பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். மாதத்துக்கு ஓரிருமுறை பாரத் தனது கிராமத்துக்கு வந்து மனைவி, பிள்ளைகளைப் பார்த்துவிட்டுச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கொடூர கொலை… நாடகம்
இந்த நிலையில், கடந்த ஜூலை 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்திருந்தார் பாரத். தொடர்ந்து நேற்று முன்தினம் திங்கள்கிழமை மாலை, மனைவி வற்புறுத்தலின்பேரில், மனைவியுடன் தனது இளைய மகளையும் அழைத்துக்கொண்டு குருவராஜப்பாளையம் பகுதியிலிருக்கும் கடைப் பகுதிக்கு பைக்கில் சென்றார். மீண்டும் வீடு திரும்புவதற்குள்ளாக இருள் சூழ்ந்துவிட்டது.
இரவு 9 மணியளவில், குப்பம்பாளையம் கிராமத்துக்குச் செல்லும் பாதையில் வந்துகொண்டிருந்தபோது, ராமச்சந்திரா என்பவரின் நிலத்தின் அருகில் பாதையை மறித்தவாறு தென்னை மட்டைகள் போடப்பட்டிருந்தன. இதைப் பார்த்து பைக்கை நிறுத்தினார் பாரத். அப்போது மறைவாக இருந்த இளைஞன் ஒருவன் பாய்ந்து வந்து பாரத்தை கத்தியால் கொடூரமாக வெட்டினான். தலையின் பின்பக்க கழுத்தில் பலத்த வெட்டுப் பட்டு மனைவி மற்றும் இளைய மகளின் கண் முன்பே துடிதுடித்து உயிரிழந்தார் பாரத்.
பாரத்தின் கதையை முடித்த கொலையாளி ரத்தக்கறைப் படிந்த கத்தியுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதையடுத்து, கணவனின் சடலத்தின் அருகே அமர்ந்துக்கொண்டு கண்ணீர் நாடகம் நடத்தத் தொடங்கினார் மனைவி நந்தினி. ஊர்க்காரர்கள் மூலம் தகவலறிந்ததும், வேப்பங்குப்பம் காவல் நிலையப் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்றனர். எஸ்.பி மயில்வாகனனும் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை பார்வையிட்ட பிறகு, விசாரணையைத் துரிதப்படுத்தி கொலையாளியை விரைந்துப் பிடிக்கவும் உத்தரவிட்டார்.
சாரா என்கிற மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது. மோப்ப நாய், சிறிது தூரத்திலுள்ள கிணற்றுப் பகுதி வரை ஓடிச் சென்று நின்றது. அந்தக் கிணற்றுப் பகுதியிலுள்ள புதர் மறைவில்தான் ரத்தக்கறைப் படிந்த கத்தியும் கண்டெடுக்கப்பட்டது. கொலையாளியும் அந்தக் கிணற்றில் இறங்கி குளித்துவிட்டு மாற்று உடை அணிந்துச் சென்றதும் தெரியவந்தது.
விசாரணை வளையத்தில் மனைவி
இதையடுத்து, போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். `வெளியூரில் வேலைப் பார்ப்பவருக்கு உள்ளூரில் யார் எதிரி?’ என்கிற கோணத்தில் விசாரணையும் தொடங்கியது. `மனைவி, மகள் முன்பு பாரத் வெட்டி சாய்க்கப்பட்டிருக்கிறார். அப்படியெனில், கொலையாளியை இருவருமே அடையாளம் கண்டிருப்பார்கள்’ என்கிற கோணத்தில், மனைவியை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர்.
அவர் தனக்கு `எதுவுமே தெரியாது’ என்று நாடகமாடிக் கொண்டிருந்தார். இதனால், நந்தினி மீது சந்தேகம் வலுத்தது. நந்தினியின் நடத்தைக் குறித்தும் ஊருக்குள் விசாரித்தபோது, எதிர் வீட்டில் வசிக்கும் திருமூர்த்தி என்கிற சஞ்சய் (21) என்ற இளைஞனுடன் திருமணம் தாண்டிய உறவுமுறையில் நந்தினி தொடர்பிலிருப்பதும், இந்த விவகாரத்தால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இங்குதான் ட்விஸ்ட். பாரத் வெட்டுப்பட்டு இறந்துகிடந்த சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோது, சடலத்தின் அருகிலேயே அப்பாவி போல கைகட்டி நின்றுகொண்டிருந்தான் சஞ்சய். அப்படியெனில், “ `கொலையை நிகழ்த்திவிட்டு அடுத்து என்ன நடக்கப் போகிறது’ என்பதையும், `தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாது’ என்பதாலும் சஞ்சய் அங்கு வந்து நின்றிருக்கலாம்’’ என்கிற கோணத்தில், அவனையும் பிடித்து கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். அதில் செய்த கொலையை சஞ்சய் ஒப்புக்கொண்டான்.
திட்டமிட்ட படுகொலை
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், `இது திட்டமிட்ட படுகொலை’ என்பதும் தெரியவந்தது. பாரத் வெளியூரில் வேலை பார்த்துவந்ததால், வீட்டில் குழந்தைகளுடன் நந்தினி தனியாகத்தான் இருந்துவந்திருக்கிறார். எதிர் வீட்டில் வசிக்கும் சஞ்சய்க்கு இன்னும் திருமணமாகவில்லை. கூலி வேலை செய்துவந்தான் அவன். நந்தினி பார்க்க அழகாக இருப்பதால், அவரை அடைய சஞ்சய் திட்டமிட்டிருக்கிறான். இதற்காக, நந்தினியுடன் அடிக்கடி பேச்சுக்கொடுத்து நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டான். இந்த நெருக்கம்தான் உறவையும் வளர்த்தது. இரவு, பகல் பாராமல் நந்தினியின் வீட்டுக்குள் சென்று அவருடன் நெருக்கமாக இருந்துவந்திருக்கிறான் சஞ்சய்.

இவர்களின் தொடர்பு ஊருக்குள் தெரியவந்ததையடுத்து, கணவர் பாரத்துக்கும் உறவினர்கள் தெரியப்படுத்தியிருக்கின்றனர். அவரும் ஊருக்கு வரும்போதெல்லாம் மனைவியை கண்டித்து திருந்தச் சொல்லியிருக்கிறார். அதன்பிறகும் கூட நந்தினி மாறவில்லை எனத் தெரிகிறது. இப்படியே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டாக திருமணம் தாண்டிய உறவு விவகாரம் நீடித்துவந்திருக்கிறது. ஒருக்கட்டத்தில் ஆத்திரப்பட்டு, மனைவி நந்தினியை அடிக்க வேண்டிய நிலைக்கும் ஆளானார் கணவர் பாரத்.
இந்த நிலையில்தான் தங்களின் நெருக்கத்துக்கு இடையூறாக உள்ள கணவர் பாரத்தை ஒரே அடியாகத் தீர்த்துக்கட்ட நந்தினியும், சஞ்சய்யும் முடிவு செய்தனர். அதன்படிதான் நேற்று முன்தினம் இரவு கணவர் பாரத்தை கடைப் பக்கம் அழைத்துச்சென்று விட்டு மீண்டும் திரும்பும்போது, காதலனை ஏவி கதையை முடித்திருக்கிறார் நந்தினி. இந்த வழக்கில், நேரில் பார்த்த சாட்சியமாக, கொலை செய்யப்பட்ட பாரத்தின் இளைய மகள் சேர்க்கப்பட்டிருக்கிறார். விசாரணைக்குப் பிறகு மனைவி நந்தினியையும், அவரின் காதலன் சஞ்சயையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்திருக்கின்றனர்.
தந்தை கொல்லப்பட்டு தாய் சிறைக்குச் சென்ற நிலையில், அவர்களது இருப் பிள்ளைகளும் நிர்கதியாக நிற்கின்றனர். திருமணம் மீறிய தொடர்பால் ஒருக் குடும்பமே நிலைகுலைந்து போயிருக்கிறது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.