
தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டில் தனி நபர் வருமானம் 1.96 இலட்சம் ரூபாயாக உயர்ந்து, தனிநபர் வருமான குறியீட்டின் மூலம் மாநிலங்களுக்கிடையே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், தொழில்துறை, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சமூக நலனில் மாபெரும் சாதனைகளைப் படைத்து நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது, தமிழ்நாடு.
அந்தச் சாதனை பட்டியலில் மற்றுமொன்றாக, தமிழ்நாடு ரூ.1,96,309 என்ற தனிநபர் வருமான குறியீட்டின் மூலம் மாநிலங்களுக்கிடையே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தச் சாதனையானது, திராவிட மாடலின் தொலைநோக்கு திட்டங்கள், தொழில் வளர்ச்சி, முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது.
“எல்லார்க்கும் எல்லாம்” என்ற உன்னத கொள்கையோடு செயல்பட்டு வரும் நமது திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அடுத்த மணிமகுடம் தான் இது. கடந்த ஆட்சியின் இறுதியாண்டான 2020-21-ல் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 1.43 இலட்சம் ரூபாய் மட்டுமே.
நம் கழக ஆட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளில் சராசரியாக 8.15 சதவீதம் வளர்ச்சியோடு 2024-25 ஆம் ஆண்டில் தனி நபர் வருமானம் 1.96 இலட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுவே கடந்த ஆட்சிக் காலத்தில், 2016-17 ஆம் ஆண்டு முதல் 2020-21 ஆம் ஆண்டு வரை 4.42 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. இத்தகைய உயரிய சராசரி வளர்ச்சியானது, வெற்றிகரமான திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு சான்றாகும்.
தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் 2024-25 ஆம் ஆண்டில் தேசிய சராசரி தனிநபர் வருமானம் 1.14 இலட்சம் மட்டுமே. 2014-15 முதல் 2024-25 வரையிலான கடந்த பத்தாண்டு தேசிய சராசரி வளர்ச்சி விகிதம் 57 சதவீதம் மட்டுமே.

ஆனால், அனைவரையும் வியக்க வைக்கும் வகையில், தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி விகிதமோ 83.3 சதவீதம் ஆகும். மக்கள் நலனை மையப்படுத்தி, பொருளாதார முன்னேற்றத்தில் மட்டும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசு கவனம் செலுத்தியதால் இவை சாத்தியமானது.
இதே உற்சாகத்தோடு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி அண்ணன் தளபதி அவர்களின் தலைமையில் இன்னும் வேகமாகப் பயணிப்போம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பதிவைப் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், “தேசிய சராசரியை விஞ்சினோம்! கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்! அடுத்து வரவுள்ள திராவிட மாடல் 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!” எனத் தெரிவித்திருக்கிறார்.