
சென்னை: பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் உடற்கல்வி பாடவேளையை கடன் வாங்காதீர்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2024-25ம் கல்வியாண்டில் நடைபெற்ற சர்வதேச (135), தேசிய (1,350), மாநில (4,293) அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற 5,788 மாணவ, மாணவிகளுக்குபாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடங்கப்பட்ட ஆற்றல் மிகு உடற்கல்வி திட்டத்தின் கீழ், மாணவர்களின் நல்வாழ்வை உறுதிபடுத்துவதை நோக்கமாக கொண்டு ‘உடற்கல்வி ஆசிரியர் வளநூல்’ எனும் புத்தகத்தை 3 தொகுதிகளாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். முதல் பிரதியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெற்றுக்கொண்டார்.