
அமெரிக்காவின் குடிவரவு தடுப்பு மையங்கள்(US Detention Centres) பற்றி மனித உரிமைகள் அமைப்பான Human Rights Watch வெளியிட்டுள்ள அறிக்கையில் அங்கு நடக்குக் தவறான நடைமுறைகள் பற்றியும், உரிய ஆவணமில்லாத குடியேறிகள் இழிவாக நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கை ஜனவரி 2025 முதல் ஃப்ளோரிடாவில் உள்ள நெருக்கடியான மூன்று மையங்களின் நிலைமையை சுட்டிக்காட்டுகிறது.
அங்கு குடியேறிகள், மன்னர் காலத்தில் கடுந்தண்டனைப் பெற்ற குற்றவாளிகளைப் போல இரண்டு கைகளும் விலங்குகளால் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டுள்ளனர். அப்படியே ‘நாய்களைப் போல’ தங்கள் முன்னால் வைக்கப்படும் தெர்மாகோல் போன்ற பாலிஸ்டிரீன் தட்டில் வாய் வைத்து சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
அரங்கேறும் கொடூரம்:
அத்துடன் டஜன் கணக்கில் ஆண்களை ஒரே சிறையில் அடைத்து மாலை 7 மணி வரை அவர்களுக்கு மதிய உணவு கொடுக்கப்படாமல் பட்டினிப்போடப்படுகின்றனர். அதுவும் அவர்கள் முன்னாலேயே நாற்காலியில் உணவை வைத்துக்கொண்டு. இந்த கொடுமைகள் அனைத்தும் மியாமி குடியேறிகள் சிறையில் நடப்பதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்கு மியாமியில் உள்ள குரோம் நார்த் சேவை செயலாக்க மையத்தில் (Krome North Service Processing Center) பெண் குடியேறிகள், ஆண்கள் பார்வைக்கு முன்னிலையில் கழிவறையைப் பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கு ஏற்ற மருத்துவம், குளியல் வசதிகள் மற்றும் உணவுப்பொருட்களோ வழங்கப்படுவது இல்லை.
குடிவரவு தடுப்பு மையங்கள் கூட்ட நெரிசலில் நிரம்பி வழிகின்றன. இதனால் அங்கு கொண்டு செல்லப்படும் குடியேறிகள், 24 மணி நேரத்துக்கும் மேலாக பார்கிங் பகுதியில் பேருந்தில் நிற்கவைக்கப்பட்டுள்ளனர். ஆண்களும் பெண்களும் புழுக்கத்தில் நெருக்கடித்துக்கொண்டு… அவர்களது கைகள் விலங்குகளால் பூட்டப்பட்டுள்ளது. கழிப்பறை செல்லும் நேரத்தில் மட்டுமே அவை விடுவிக்கப்பட்டுள்ளன.

பேருந்தில் சென்ற ஒரு நபர், “அந்த கழிப்பறை அடைத்துக்கொண்டது. பொதுவாக அதுபோன்ற கழிப்பறைகளை சிறுநீர் கழிக்க மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால் நாங்கள் பஸ்ஸில் இருந்து இறங்க அனுமதிக்கப்படாததால் சிலர் அதில் மலம் கழித்தனர். மொத்த பேருந்திலும் மலத்தின் துர்நாற்றம்… எல்லாமும் அருவருப்பானதாக மாறியது…” எனப் பேசியுள்ளார்.
பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டதும் குடியேறிகள் ஒரு குளிரான அறைக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு படுக்கையோ, கதகதப்பான உடைகளோ கிடையாது. குளிரான கான்கிரீட்டில் அப்படியே படுக்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த அறையை ஹைலேரா அல்லது ஐஸ் பெட்டி என அழைக்கின்றனர்.
காயமடைந்த குடியேறிகளுக்கு மருத்துவ உதவி மிகத் தாமதமாகவே கிடைத்திருக்கிறது. மருத்துவ அல்லது உளவியல் பராமரிப்பு என்பதே கிடையாது. இந்த வசதிகள் இல்லாததனாலேயே 44 வயது ஹைத்தியப் பெண்ணான மேரி ஆஞ்ச் பிளேஸ் பொம்பனோ கடற்கரையில் உள்ள ப்ரோவர்ட் இடைநிலை மையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்துள்ளார்.
இறக்கும் தருவாயில் பிளேஸ் அருகில் இருந்த ரோசா என்பவர், உதவிக்கு காவலர்களை அழைத்ததாகவும் அவர்கள் அலட்சியமாக செயல்பட்டு தாமதித்தாலேயே பிளேஸ் மரணமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
குடியேறிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதனாலேயே எவர்க்லேட்ஸில் “அலிகேட்டர் அல்காட்ராஸ்” சிறை 5000 பேர் வைக்கப்படும் அளவுக்கு கட்டப்பட்டுள்ளது. அதுவும் கூட்ட நெரிசலால் நிரம்பி வழிகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.