
தமிழகத்தில் தாமரை மலரவே, மலராது என்று திமுக கூட்டணிக் கட்சிகள் முழங்கிக் கொண்டிருந்த சமயத்தில், பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தின் மொடக்குறிச்சி தொகுதியில் 2021-ல் தாமரையை மலரவைத்து தனது செல்வாக்கைக் காட்டியது பாஜக. அப்போது இந்தத் தொகுதியில் போட்டியிட்ட திமுக துணைப் பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை பாஜக புதுமுகமான டாக்டர் சரஸ்வதி தோற்கடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இப்போது பாஜக-விடம் இருந்து இந்தத் தொகுதியைக் கைப்பற்ற காங்கிரஸ் ஆளுக்கு முந்தி களமிறங்கி இருக்கிறது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தானே நேரடியாக போட்டியிட்டு அந்தத் தொகுதியை காங்கிரஸிடம் இருந்து கைப்பற்றியது திமுக. இனி ஈரோடு கிழக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், ஏற்கெனவே தாங்கள் வென்ற மொடக்குறிச்சி தொகுதிக்காக இப்போது ‘உரிமைக்குரல்’ எழுப்பத் தொடங்கி விட்டது காங்கிரஸ்.