• July 22, 2025
  • NewsEditor
  • 0

பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அம்பர்ட் நகரத்தில் மக்கள் தொகை குறைந்து வருவதால், அதனை மீட்டெடுக்கும் முயற்சியாக, வெறும் ஒரு யூரோவுக்கு (தோராயமாக 100 ரூபாய்) வீடுகளை விற்பனை செய்யும் தனித்துவமான திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

6,500 மக்கள்தொகை மட்டுமே கொண்ட இந்த சிறிய நகரம், புதிய குடியிருப்பாளர்களை ஈர்க்க இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் வீடு வாங்க கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகள் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. ஏற்கனவே வீடு வைத்திருப்பவர்கள் அல்லது இரண்டாவது முறையாக வீடு வாங்குபவர்கள் இத்திட்டத்தில் வீடு வாங்க முடியாது.

மேலும், வாங்கிய வீட்டை வாடகைக்கு விடுவதற்கு அனுமதி இல்லை. அப்படி வாங்கும் வீட்டை புனரமைத்து, வாழக்கூடிய நிலைக்கு கொண்டு வந்த பிறகு, வாங்குபவர்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அங்கு வசிக்க வேண்டும்.

அளிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறினால், அரசு வழங்கிய மானியத்தை ரத்து செய்துவிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீடுகளில் பெரும்பாலானவை மோசமான நிலையில் தான் இருக்குமாம். இதனால் அதற்கு புனரமைப்பு பணிகள் தேவைப்படுகின்றன. கூரை பழுது, மின் இணைப்பு மறுசீரமைப்பு, சுவர்கள் பழுது பார்ப்பது போன்ற முக்கிய கட்டமைப்பு பணிகள் அவசியமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால், வீட்டை வாழத்தக்க நிலைக்கு கொண்டு வருவதற்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவாகலாம். ஒரு யூரோவுக்கு வீடு வாங்குவது எளிதாக தோன்றினாலும், புனரமைப்பு செலவுகள் மற்றும் நிபந்தனைகள் இந்த திட்டத்தை சவாலாக்குகின்றன.

ஐரோப்பாவில் இதுபோன்ற திட்டங்கள் அம்பர்ட் நகரத்தில் மட்டுமல்ல, பல நகரங்கள் குறைந்த விலையில் வீடுகளை வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இத்தகைய திட்டங்கள் புதிய குடியிருப்பாளர்களை ஈர்க்கும் நோக்கம் கொண்டவை என்றாலும், கடுமையான நிபந்தனைகள் காரணமாக பலர் இதில் பங்கேற்க தயங்குகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *