
‘கபாலி’ திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது.
2014-ம் ஆண்டு ரஜினிக்கு ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ என இரண்டு படங்கள் வெளியாகியிருந்தன.
அப்படத்திற்குப் பிறகு 2015-ம் ஆண்டு ரஜினிக்கு எந்தத் திரைப்படமும் வெளியாகவில்லை.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.
படம் வெளியாகி 9 ஆண்டுகளைக் கடந்திருப்பதை ஒட்டி, படத்தின் முக்கியமான சில காட்சிகளை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
கபாலி பட வெளியீட்டின் சமயத்தில் ஆனந்த விகடனுக்கு அளித்தப் பேட்டியில், பா.ரஞ்சித் கபாலி திரைப்படம் தொடர்பாகப் பலரும் அறிந்திடாத விஷயங்களைப் பகிர்ந்திருந்தார்.
கோவா திரைப்படத்தில் உதவி இயக்குநரக வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் இப்படத்தின் ஐடியா ரஞ்சித்துக்கு தோன்றியிருக்கிறது.
‘கோவா’ படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியாவில் 35 நாட்கள் தங்கியிருக்கிறார் ரஞ்சித். அப்போதுதான் அவர் அங்கு வாழும், இங்கிருந்து பிழைக்கப் போன தமிழர்களின் வாழ்க்கையை குறித்து படித்திருக்கிறார்.
அப்போதே அவருக்கு மலேசிய தமிழர்கள் சந்தித்த போராட்டத்தை சினிமாவாக எடுக்க வேண்டுமென ஒரு எண்ணம் தோன்றியிருக்கிறது.

ரஜினிக்கு கதை சொல்ல இயக்குநர் பா.ரஞ்சித்தை ரஜினியின் மகள் செளந்தர்யா அழைத்திருக்கிறார்.
அப்போது ரஜினிக்கென்று சூப்பர் நேச்சுரல் சயின்ஸ் ஸ்டோரி , கேங்ஸ்டர் கதை என இரண்டு ஒன்லைன்களை ரஞ்சித் தன் கைவசம் வைத்திருக்கிறார்.
கேங்ஸ்டர் கதையையே ரஜினியும் விரும்பிக் கேட்டு அவருக்கே உரித்தான ஸ்டைலில் ‘உடனே வேலையை ஆரம்பிங்க’ என ரஞ்சித்திடம் சொல்லியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து கபாலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நினைவுகளையும், ரஜினிக்கு அப்போது உடல்நலம் சரியில்லாமல் இருந்தது குறித்து ரஞ்சித் பேசுகையில், “கபாலி படத்தின் கடைசிக் கட்ட ஷூட்டிங்கின்போது ரஜினி சாருக்கு உடல்நிலை சரியில்லை.
தன்னால் ஷூட்டிங் பாதிக்கக் கூடாது என்று அதை வெளியே சொல்லாமல் மறைத்துவிட்டார்.
சில சமயம் நானே கண்டுபிடித்துக் கேட்டாலும், ‘நோ… நோ, ஐ ஆம் பெர்ஃபக்ட். நோ ப்ராப்ளம்’ என்று சொல்லிவிட்டார்.

தர்மதுரை படத்தில் நடித்த காலத்தில் தான் அவர் நைட் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.
அதற்குப் பிறகு இப்போது கபாலியில் தொடர்ந்து 20 நாட்கள் நைட் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு, விடிய விடிய கண் விழித்து நடித்துக் கொடுத்தார்.
காலையில் 7 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தவுடனே, ‘யப்பா… சாயங்காலம் சரியாக 6 மணிக்குக் கிளம்பிடுவேன்’ என்று சொல்வார். ஷூட்டிங் முடிய நைட் 2 மணி ஆகிவிடும்.
அதுவரை ஸ்பாட்டில் இருந்துவிட்டுத்தான் போவார். ஷூட்டிங் ஸ்பாட்டில் வேறு ஆர்ட்டிஸ்ட்கள் நடிக்கும்போது கை தட்டுவார்.
அவர்களுக்குக் கைகொடுத்துப் பாராட்டுவார். ‘சூப்பர் சீன் சார்!’ என்று என்னையும் பாராட்டுவார்.
அவர் ஸ்பாட்டில் இருக்கும்போது நமக்குப் பெரிய நம்பிக்கை கிடைத்த மாதிரி இருக்கும்.
படப்பிடிப்பில் என்னை ‘ரஞ்சித்’ என்று ஒரு நாள்கூட கூப்பிடவில்லை. ‘டைரக்டர் சார்’ என்றுதான் கூப்பிடுவார். ரஜினி சார் டப்பிங் பேசும்போது எந்த டைரக்டரையும் உள்ளே அனுமதிக்கவே மாட்டார்.
டப்பிங் பேச வரும் முன்பே, ‘டைரக்டர் வரக் கூடாது. வந்தால் நான் டப்பிங் பேச மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார்.

முதல் நாள் பேசிவிட்டுப் போய்விட்டார். அதைத் திரையில் பார்த்த எனக்குத் திருப்தியாக இல்லை. மறுநாள் ரஜினி சார் வீட்டுக்குப் போனேன்.
நான் கொண்டு சென்றிருந்த ‘நெருப்புடா…’ பாடல் ஆடியோவைப் போட்டுக் காண்பித்தேன். ‘சூப்பராக இருக்கிறது’ என்று பாராட்டினார். ‘பாடியது, எழுதியது யார்?’ என்று விசாரித்தார். ஹேப்பியாக இருந்தார்.
அந்தச் சமயம் பார்த்து, ‘சார், நீங்கள் டப்பிங் பேசும்போது நான்கூட இருப்பேன்’ என்று சொன்னேன். அதிர்ந்தார்.
‘என்னுடைய கரியரில் நான் டப்பிங் பேசும்போது எந்த டைரக்டரும் என்னுடன் இருந்ததே இல்லை. மணிரத்னம் மட்டும் தளபதி படத்துக்குப் பேசும்போது சண்டை போட்டு என்னுடன் இருந்தார்’ என்று சொன்னவர், கொஞ்சம் நேரம் யோசித்துவிட்டு, நான் அருகில் இருக்க ஓ.கே சொல்லிவிட்டு, ‘முதல் நாள் பேசியதை மறுபடியும் பேச மாட்டேன்’ என்று கோபமாகச் சொல்லிவிட்டார்.

அப்போது நானும் ‘சரி’ என்று சொல்லிவிட்டேன். கடைசி நாள் டப்பிங் பேசும்போது, ‘சார், முதல் நாள் பேசியதை மறுபடியும் பேசினால் நல்லா இருக்கும் சார்’ என்று சொன்னேன்.
‘டைரக்டர் சார், நீங்கள் பயங்கரமான ஆள்’ என்று சிரித்துக்கொண்டே, ‘சினிமாவில் இதுவரை என்னைக் கொடுமைப்படுத்தியவர்கள் ரெண்டு பேர்.
இப்போது மூன்றாவதாக நீங்கள் சேர்ந்திருக்கிறீர்கள்’ என்று ஜாலியாகச் சொன்னார்” என்றார்.