
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மணியம்பட்டி மலைக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி திஷியா(8). இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறோம்.
பெற்றோரை இழந்த நிலையில், தனது பாட்டியுடன் சிறுமி திஷியா வசித்து வருகிறார். இந்த நிலையில் தனது உறவினர்களுடன் கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பம் பெற வேண்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அங்குக் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை அலுவலகத்திற்குச் சென்ற சிறுமி திஷியா அங்கிருந்த அதிகாரிகளிடம், “நானும் படித்து மாவட்ட ஆட்சியர் ஆகப் போகிறேன்” எனக் கூறியுள்ளார்.
அங்கிருந்த அதிகாரிகள் சிறுமியை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமி திஷியாவிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், “நீ படித்து என்ன ஆகப்போகிறாய்?” எனக் கேட்டுள்ளார். அப்போது சிறுமி திஷியா, “நானும் உங்களைப் போலவே ஆட்சியர் ஆகப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த ஆட்சியர் உடனடியாக சிறுமிக்குத் தனது அலுவலக அறையைச் சுற்றிக் காட்டினார். பின்னர், சிறுமியை நுழைவாயிலுக்கு அழைத்து வந்த ஆட்சியர், தனது காரில் முன் இருக்கையில் சிறுமியை அமர வைத்து ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றிக் காண்பிக்கச் செய்தார்.
தொடர்ந்து, சிறுமியிடம் பேசிய ஆட்சியர், “நன்றாகப் படித்து முதல் மதிப்பெண் பெற வேண்டும். உயர் கல்வியிலும் சிறந்து விளங்கி ஆட்சியராக வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.