• July 22, 2025
  • NewsEditor
  • 0

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட உதயந்தேரி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கிளை நூலகம், 13,500 வாசகர்களுடனும், காலை மாலை நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து செல்லும் அறிவுக் களஞ்சியமாக விளங்கினாலும், தற்போது மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது.

20 ஆண்டுகளுக்கு மேலாகப் பராமரிப்பின்றி விடப்பட்ட இந்தக் கட்டடம், மேற்கூரை உதிர்ந்து, சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு, எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

மின் வயர்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல், மின்சார விபத்துகளை ஏற்படுத்தும் அபாயகரமான சூழலில் உள்ளது.

மழைக்காலங்களில் கட்டடத்திற்குள் தண்ணீர் ஒழுகுவதால், வரலாறு, இலக்கியம், நாவல்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனையாளர்களின் கட்டுரைகள், ஆன்மிகம், சமையல் குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மதிப்புமிக்க புத்தகங்கள் நனைந்து சேதமடைகின்றன.

பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய இந்தப் புத்தகங்கள், பழைய காகிதக் கடையில் குவிப்பது போல மூலைகளில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

புதிதாக வாங்கப்பட்ட நூலகப் பொருட்களும் ஆங்காங்கே குவிக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் வீணாகி வருகின்றன. கட்டடத்தின் மேற்கூரையில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுவதாலும், சுவர்களில் விரிசல்கள் பெருமளவில் உள்ளதாலும், இந்நூலகத்திற்கு வரும் வாசகர்கள் ஒருவித அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.

குறிப்பாக TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், இங்கு பயனுள்ள புத்தகங்கள் இருந்தும், இந்த மோசமான சூழல் காரணமாகப் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தக் கட்டடத்தை அவ்வப்போது பராமரிக்காமல் அலட்சியமாக விட்டுவிட்டதே இத்தகைய நிலைக்குக் காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நூலகத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் இந்த அறிவுக் களஞ்சியத்தை முற்றிலும் இழக்க‌ நேரிடும். எனவே, கட்டடத்தை உடனடியாகச் சீரமைக்கவோ அல்லது நவீன வசதிகளுடன் புதிய நூலகக் கட்டடத்தைக் கட்டித் தரவேண்டும் என அரசுக்கு உள்ளூர் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, “நாங்கள் இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசியுள்ளோம், அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்கள்” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *