
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கள்ளியூர் கிராமத்தில் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக் கோரி அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு முன்னரும், ஒரு சில மாதங்களுக்கு முன்பு, அப்பகுதி மக்கள் கல்குவாரி அமைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுக்குப் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். கள்ளியூர் பகுதியில் மீண்டும் கல்குவாரி அமைக்கப் பணிகள் நடைபெற்றதால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென பச்சூர் வழியாகக் குப்பம் செல்லும் சாலையில், சென்றாய் சுவாமி கோயில் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகச் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாகப் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும், இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் மட்டுமே காட்டி வருவதாகக் குற்றம்சாட்டி, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “2022 ஆம் ஆண்டிலிருந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கவில்லை. கள்ளியூர் பகுதியில் கல்குவாரியின் பணிகள் தொடங்கினால், வெடி வைக்கும்போது நிலத்தடி நீர் பாதிக்கப்படும். மேலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல்வேறு நோய்த் தொற்று ஏற்படுவதோடு, நாங்கள் புதிதாகக் கட்டி வந்த வீடுகளில் விரிசல் ஏற்படும். அரசு உத்தரவுப்படி, கல்குவாரி அமைய உள்ள இடத்தில் 500 மீட்டர் தொலைவிற்கு வீடுகள் இருக்கக் கூடாது. ஆனால் தற்போது குவாரி உள்ள இடம் 160 மீட்டரில் தொலைவில் எங்கள் வீடுகள் உள்ளது. நாங்களே வீடு கட்டுவதற்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து எங்கள் வீட்டைக் கட்டியுள்ளோம். மேலும், கல்குவாரியில் வைக்கும் வெடிச் சத்தத்துக்குப் பயந்து காட்டில் உள்ள சிறுத்தை, கரடி, மான், மயில், குரங்குகள் அடிக்கடி ஊருக்குள் வந்துவிடுகின்றன. குவாரி அமைப்பதால் எங்கள் விவசாய நிலங்கள் பெரிதாகப் பாதிக்கப்படுகிறது.
காடுகள் இருந்தால்தான் எங்களுடைய வாழ்வாதாரமான ஆடு, மாடுகள் மேய்க்க முடியும். இந்தக் கல்குவாரி அமைந்தால் ஆடுகள், மாடுகள் உணவுக்காக அல்லாடும். பின்பு அதே போல் குடிப்பதற்குக் குடி தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுவோம். இந்தக் கல்குவாரி வீடுகளுக்கு அருகாமையில் இருப்பதால், எங்களின் நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. ஒரு சில அரசு அதிகாரிகளே எங்களை மிரட்டுகிறார்கள். இரவில் வந்து, ‘கையெழுத்துப் போடு, இல்லையென்றால் இங்கு யாருமே இருக்க மாட்டீங்க’ என்று யார் யாரோ வந்து மிரட்டுகிறார்கள்.

காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தோம். ‘இதோ… அதோ நடவடிக்கை எடுக்கிறோம்’ என்கிறார்கள். ஆனா தொடர்ந்து மௌனம் மட்டும் காட்டி வருகிறார்கள். எங்கள் பகுதியில் கல்குவாரி அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால், அடுத்த கட்டமாக கல்குவாரி அருகாமையிலே சாலை மறியலில் ஈடுபடுவோம்” என்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, “உயர் அதிகாரிகள் என்ன கூறுகிறார்களோ, அதைத் தான் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். நாங்கள் எதும் புதிதாகச் செய்வதில்லை” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டனர்.