
‘Dev.D’, ‘Gangs of Wasseypur’, ‘Black Friday’ போன்ற திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவின் கவனம் ஈர்த்தவர் அனுராக் காஷ்யப். Dev.D படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை கல்கி கோச்லினை 2011ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
புதுச்சேரியில் பிறந்த கல்கி பிரெஞ்சு-இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். திருமணமான 2 ஆண்டுகளிலேயே இருவருக்குமிடையேயான கருத்து மோதல்களால் 2015ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றனர்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் அனுராக் உடனான விவாகரத்து குறித்துப் பேசியிருக்கும் நடிகை கல்கி, “என்னுடைய பெற்றோர்கள் மாறி மாறி சண்டை போட்டு இருவரின் வாழ்க்கையையும் அழித்துக் கொண்டனர். இவர்களின் சண்டையால் அப்போது 13 வயதிலிருந்த என்னுடைய வாழ்வும் கேள்விக்குரியதாகியிருந்தது.
பிறகு இருவரும் ஒத்துவரவில்லை என்று என்னுடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பிரிந்து இருவரும் நன்றாக வாழ்ந்தனர். நானும் சண்டைகளைப் பார்க்காமல், என்னுடைய எதிர்கால வாழ்வைப் பார்த்து முன்னேறினேன். என் பெற்றோரின் சண்டைகளும், எனது சிறுவயது மன அழுத்தமும் ஆழமாக என் மனதில் பதிந்துவிட்டன.

எனக்குத் திருமணமான கொஞ்ச நாளில் இருவருக்குமிடையேயான சண்டை நாளுக்குநாள் வலுத்தது. என் சிறுவயதின் மன அழுத்தம் நிறைந்த நாள்கள் அப்போது என் கண்முன் வந்துபோனது. எனக்குக் குழந்தை பிறந்தால், இந்தச் சண்டைகளால் அதன் வாழ்வு கேள்விக்குரியதாகிவிடும் என்று மனதில் ஓடியது. இதை மனதில் வைத்துத்தான் நான் விவாகரத்து செய்தேன்” என்று வெளிப்படையாகத் தனது விவாகரத்து குறித்துப் பேசியிருக்கிறார் கல்கி.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…