
எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத மலைக் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள படம், ‘போகி’. உண்மைச் சம்பவக் கதையான இதில், நபி நந்தி, சரத், சுவாஸிகா, பூனம் கவுர், வேல. ராமமூர்த்தி, சங்கிலி முருகன், ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் என பலர் நடித்துள்ளனர். ராஜா சி சேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு மரியா மனோகர் இசை அமைத்துள்ளார்.
வி.ஐ.குளோபல் நெட்வொர்க்ஸ் தயாரித்துள்ள இதை விஜயசேகரன் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, “ஒரு மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்குக் கல்வியும் மருத்துவமும் கனவாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த நாயகன், தனது தங்கை மூலமாக தனது கிராமத்தின் மருத்துவ தேவையை சரி செய்ய விரும்புகிறான். அது நடந்ததா, இல்லையா? என்பது படத்தின் கதை” என்றார். ஆக. 1-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தை பிஜிபி என்டர்பிரைசஸ் சார்பில் பி.ஜி.பிச்சைமணி வெளியிடுகிறார்.