• July 22, 2025
  • NewsEditor
  • 0

பயண அவசரத்தில் டிக்கெட்டை எடுக்காமல் சென்றுவிடுவதைப்பற்றி கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் பயண அவசரத்தில் தனது மனைவியையே மறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் செளகான் தனது மனைவி சாதனா சிங்குடன் குஜராத்திற்கு அரசு மற்றும் ஆன்மிக சுற்றுப்பயணம் வந்திருந்தார்.

அவர்கள் குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயில், கிர் வன விலங்குகள் சரணாலயம் போன்ற இடத்திற்கு சென்றுவந்தனர். சோம்நாத் கோயிலில் சிவ்ராஜ் சிங் செளகான் தியானம் இருந்து வழிபட்டார். கிர் தேசிய விலங்குகள் சரணாலயத்தில் இருவரும் சிங்கங்களை பார்வையிட்டனர். அவற்றை பார்த்துவிட்டு ஜுனாகாட் என்ற இடத்தில் உள்ள ஓய்வு விடுதியில் தனது மனைவியை இருக்க சொல்லிவிட்டு நிலக்கடலை ஆராய்ச்சி மையத்திற்கு சிவ்ராஜ் சிங் செளகான் சென்றார்.

அங்கு பெண்களுடன் கலந்தாய்வில் ஈடுபட்டிருந்தார். மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து அவர்களிடம் பேசினார். அப்போது அவர் அடிக்கடி தனது கைக்கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

சிவ்ராஜ் சிங் செளகான் பேசிக்கொண்டிருந்த போது பாதியிலேயே தனது உரையை நிறுத்திவிட்டு, அடுத்தமுறை விரிவாக பேசுகிறேன் என்று கூறிவிட்டு அவசரமாக புறப்பட்டார். சாலைகள் மோசமாக இருப்பதால் சூரத் சென்று விமானத்தை பிடிப்பது தாமதமாகிவிடும் என்று கருதி உடனே சூரத் செல்லும்படி சிவ்ராஜ் சிங் செளகான் கேட்டுக்கொண்டார்.

விமான நிலையம்

சிவ்ராஜ் சிங் செளகானுடன் 22 கார்கள் சூரத் நோக்கிச் சென்றது. கார்கள் வேகமாக சென்று கொண்டிருந்தபோது 10 நிமிடம் கழித்துத்தான் திடீரென சிவ்ராஜ் சிங்கிற்கு தனது மனைவியும் தன்னுடன் வந்தது நினைவுக்கு வந்தது. அதோடு அவரை ஜுனாகாட்டில் விட்டுவிட்டு வந்திருப்பது ஞாபகத்திற்கு வந்தது. உடனே அவர் தனது மனைவிக்கு போன் செய்து பேசினார். வண்டியை திருப்புங்க, வண்டியை திருப்புங்க என்று கூறிய சிவ்ராஜ் சிங் செளகான் மீண்டும் அனைத்து வாகனங்களுடன் ஜுனாகாட் சென்றார்.

அங்கு தனது மனைவியை அழைத்துக்கொண்டு மீண்டும் சூரத் விமான நிலையத்திற்கு சென்றார். மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் செளகான் தன்னுடன் மனைவி வந்தது கூட நினைவில்லாமல் மனைவியைவிட்டுவிட்டு சென்றது சமூக வலைத்தள பக்கத்தில் கடுமையான விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *