• July 22, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: என் வயது 34. ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறேன். எனக்கு கடந்த சில தினங்களாக உட்காரும் இடத்தில் கடுமையான வலி இருக்கிறது. அது மூலநோய் இல்லை என்பது உறுதி. டெயில்போன் வலியாக இருக்கலாம் என்கிறார்கள் நண்பர்கள். டெயில்போன் என்றால் என்ன…. அந்த வலி ஏன் வருகிறது… தவிர்க்க முடியுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, எலும்பியல்  சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு.

நாம் உட்காரும்போது நம் உடலின் எடையானது பிட்டப்பகுதிகளில்தான் விழும். பிட்டப்பகுதிக்கு இடையில் ஓர் எலும்பு இருக்கும். அதற்கு ‘காக்சிஸ்’ (coccyx) அல்லது ‘டெயில்போன்’ (tailbone) என்று பெயர்.  

காக்சிஸ் எலும்பானது,  கடினமான பரப்பில் படும்போது ஒருவித வீக்கம் ஏற்படும். அதேபோல டூ வீலரில் செல்லும்போது, மேடு, பள்ளத்தில் வாகனம் ஏறி, இறங்கும்போது, அந்த எலும்பு அடிவாங்கலாம். சிலருக்கு வழுக்கி விழுவதன் மூலமும் அந்த எலும்பில் அடிபடலாம். படிக்கட்டுகளில் இறங்கும்போது, அந்த எலும்பில் சிலநேரங்களில் அடிபடலாம்.  அந்த எலும்பில் அழுத்தம் ஏற்படும்போது, வலி வரும். அந்த வலிக்கு ‘காக்சிடீனியா’ (Coccydynia) என்று பெயர்.

இந்த வலி வராமலிருக்க, நாம் உட்காரும் இடம் சரியானதாக இருக்க வேண்டும். அதாவது கடினமான பரப்பாக இல்லாமல், குஷன் போன்று இருக்க வேண்டும். இப்படி உட்கார்ந்து பழகியவர்களுக்கு டெயில்போன் வலி வர வாய்ப்பில்லை.

உட்காரும் இடத்தில் வலி: காரணமும், தீர்வும் என்ன?

ஒருவேளை வலி வந்துவிட்டால், அதற்கென்றே ‘காக்சிஸ் குஷன்’ (Coccyx Cushion) என பிரத்யேகமாகக் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தலாம். இன்று பலரும் கம்ப்யூட்டர் முன் 14 மணி நேரம், 16 மணி நேரமெல்லாம் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதன் விளைவாக, அவர்களுக்கெல்லாம் டெயில்போனில் அழுத்தம் ஏற்பட்டு, வலி வரும் வாய்ப்பும் அதிகம்.

அவர்கள் சரியான நாற்காலிகளைப் (Ergonomic chairs) பயன்படுத்த  வேண்டும். காக்சிஸ் குஷன் பயன்படுத்துவது, டூ வீலர் ஓட்டும்போது மேடு, பள்ளங்களில் தூக்கித்தூக்கிப் போடாதபடி கவனமாகப் பார்த்து ஓட்டுவது போன்றவற்றின் மூலம் வலி வராமல் தடுக்கலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *