
மாநில தலைவராக அண்ணாமலை இருந்தவரைக்கும் தமிழக பாஜக பரபரப்பான கட்சியாகப் பார்க்கப்பட்டது. திமுக, அதிமுக கொடிகள் கட்டிய கார்களுக்கு நிகராக பாஜக கொடி கட்டிய கார்களும் பட்டி தொட்டிகளில் கூட பவனி வந்தன. ஆனால், தற்போது இவை அனைத்துமே ஸ்லீப் மோடுக்குப் போய்விட்டது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறது. போதாக்குறைக்கு, அதிரடி அரசியல்வாதியான அண்ணாமலையும் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி பொழுதைக் கழிக்குமளவுக்கு ‘சும்மா’ இருக்கிறார்.
தமிழக பாஜக-வின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட பிறகு அமித் ஷா வருகை உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் மட்டும் அண்ணாமலையின் தலை தெரிந்தது. அதன் பிறகு அறிக்கைகளில் மட்டுமே அண்ணாமலையைப் பார்க்க முடிகிறது. சமீபத்தில் நடந்த பாஜக பூத் கமிட்டிக் கூட்டத்தில் கூட அண்ணாமலை தென்படவில்லை.