
நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் எப்போதும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வருவார்.
அவ்வப்போது தன் வாழ்வில் நிகழ்ந்த தருணங்களையெல்லாம் சமூக வலைதளப் பதிவுகள் மூலம் நமக்குச் சொல்வார்.
அப்படி நேற்றைய தினம், ஒரு திரைப்படப் பூஜையன்று 10 ஜோடிகளுக்கு தன்னுடைய சொந்தச் செலவில் திருமணம் செய்து வைத்தது தொடர்பாக அவர் போட்ட பதிவு இப்போது சமூக வலைதளப் பக்கங்களில் பரவி வருகிறது.
அந்தப் பதிவில் அவர், “‘கல்யாணசுந்தரம்’ போட்டோ செஷனோடு முடிந்து (கை)விட்ட படம்.
ஆனால் பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்தச் செலவில் தாலி முதல் மெட்டி வரை, தட்டுமுட்டு சாமான், பெட்டி, படுக்கை எனச் சீர் செய்து, சினிமாப் பூஜைகளைப் பயனுள்ளதாகவும் செய்யலாம் எனத் தொடங்கி வைத்தேன். அதுவே பின்னர் பலரால் தொடரப்பட்டது.

பின்னொரு காலத்தில் தளபதி விஜய், என் தலைமையில் 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். ‘இதன் மூலம் புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் விஜய் தான் மணமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்’ என அப்போது புரட்டிப் பேசினேன்.
அப்படிப்பட்ட நல்ல காரியங்கள் எல்லாம் சேர்ந்துதான் அவருக்கு கட்சித் தொடங்கும் தைரியம் வந்தது. யாரோ ஒருவர் இந்தப் போட்டோவை அனுப்பியதால், பழைய நினைவை கிளறியதால்…” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.